மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தல்: உன்னிப்பாக கண்காணிக்கும் அனைத்துலக சமூகம்

international-communityசிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும், அனைத்துலக சமூகம் கவலை கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் தேர்தலுக்கு இன்னமும் நான்கு நாட்களே இருக்கின்ற நிலையில், எதிரணியின் தேர்தல் பரப்புரைகளைத் திட்டமிட்டுக் குழப்பும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதுவரை பதிவாகியுள்ள தேர்தல் வன்முறைகளில் பெரும்பாலானவை அரச தரப்பு ஆதரவாளர்களுக்கு எதிராகவே பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், எதிரணிக்குச் சார்பாக வாக்குகள் அதிகளவில் பதிவாவதை தடுப்பதற்காக, வாக்களிப்பைக் குழப்ப, பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிரணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தைக் கொண்டு தமிழ்ப் பகுதிகளிலும், பொலன்னறுவன உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்களிப்பைக் குழப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, வாக்கு எண்ணிக்கை தமக்குச் சாதகமாக இல்லாது போனால், இராணுவத்தைப் பயன்படுத்தி, ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்ச சகோதரர்கள் முனையலாம் என்றும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமை, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று கருதும் அனைத்துலக சமூகம், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அண்மையில், அமெரிக்க தூதரக அரசியல் விவகார அதிகாரி, வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் சென்ற பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து யாழ்.மாவட்ட அரச அதிபர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நிலைமைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் இங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, அமைதியானதும், சுதந்திரமானதுமான வாக்களிப்பை வலியுறுத்தி, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வெளியிட்ட கருத்துக்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட  கருத்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் பதிலளித்த முறையும், அனைத்துலக சமூகத்தை விசனமடைய வைத்துள்ளதாகவும், இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *