மேலும்

சிறிலங்காவின் மீன்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை வரும் 15ம் நாள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த தடையை எதிர்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விவகாரத்தை தவறாக கையாண்டதால் தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை எதிர்கொள்ள வேண்டிய நிலை சிறிலங்காவுக்கு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“எனினும், சிறிலங்காவின் மீன் உற்பத்தியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மீனவர்களையும் தொழில்துறையையும் பாதுகாக்க பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

கடற்றொழில் அமைச்சு எல்லா மீன் உற்பத்திகளையும், கொள்வனவு செய்யும்.

எங்களிடம் இருந்து மீன் உற்பத்திகளை கொள்வனவு செய்வதாக 12 ரஸ்ய நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தையோ அல்லது வேறெந்த நாட்டையோ நாம் தங்கியிருக்கவில்லை.

தொழில்துறையை பாதுகாப்பதற்கான மாற்றுத் திட்டமே இது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிசனைகளுக்கு நாம் தீர்வு கண்டுள்ளோம்.

முன்னேற்றம் குறித்து அடுத்த முறை மீளாய்வு செய்யும் போது, தடை நீக்கப்படும் என்று நம்புகிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *