மேலும்

கிராமிய அப்பாவிச் சிங்களரின் வாக்கு வங்கியை தனதாக்கும் திறன் மகிந்தவுக்கு உண்டா?

SRI-LANKA POL -2015சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாவர். இது ஒரு அரிதான சம்பவமாகும். ஏனெனில் இதுவரை சிறிலங்காவில் போட்டியிட்ட அதிபர்களில் ஒருவர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இன்னொருவர் நகரப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர்.

இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் MEERA SRINIVASAN எழுதியுள்ள சிறிலங்கா தேர்தல பற்றிய ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக எதிரணியால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் மிகவும் இறுக்கமான இந்தப் போட்டியானது சிறிலங்காவின் வரலாற்றில் அதிகம் இடம்பெறாத நிகழ்வாகவே நோக்கப்படுகிறது.

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாவர். இது ஒரு அரிதான சம்பவமாகும். ஏனெனில் இதுவரை சிறிலங்காவில் போட்டியிட்ட அதிபர்களில் ஒருவர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இன்னொருவர் நகரப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர்.

சிறிலங்காவின் தெற்குக் கிராமத்தைச் சேர்ந்த அம்பாந்தோட்டையில் பிறந்த திரு.ராஜபக்ச 2005ல், கொழும்பு நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எதுஎவ்வாறிருப்பினும், ஜனவரி 08 தேர்தலில் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் திரு.ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிடும், வரலாற்று ரீதியாக சிங்கள கலாசாரம் மற்றும் முக்கிய வரலாற்றைக் கொண்ட இராஜரட்டையைச் சொந்த இடமாகக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தீவிர சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிறிசேனவின் சொந்த இடமான இராஜரட்டை சிறிலங்காவின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது சிறிலங்காவின் புராதன காலத் தலைநகரங்களான அனுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்றன இராஜரட்டையில் உள்ளடங்குகின்றன. அத்துடன் மைத்திரிபால சிறிசேன இவ்விரு மாவட்டங்களையும் நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இராஜரட்டையைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகிறது.

திரு.ராஜபக்சவின் அரசியற் கட்சியைச் சேர்ந்த திரு.சிறிசேன நவம்பர் மாதத்தில் அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியின் பொது அதிபர் வேட்பாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகள் எதிரணி வேட்பாளரையே சென்றடையும்.

அத்துடன் கிராமியச் சிங்களவர்கள் வழமையாகத் தமது வாக்குகளை திரு.ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கே வழங்கியுள்ளனர். ஆனால் இத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிராமங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் தமது வாக்குகளை வழங்குவார்கள் என ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் சிங்க இரட்ணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் ராஜபக்ச பெற்றுக் கொண்ட வாக்குகள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரான ளு.று.சு.னு பண்டாரநாயக்கவின் மகளும் சிறிலங்காவின் முன்னாள் அதிபருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவான சிங்கள மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளையும் உள்ளடக்கியுள்ளது.

திருமதி சந்திரிகா ஒன்பது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தற்போது சிறிலங்காவின் அரசியலில் பிரவேசித்துள்ளதானது ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்கின்ற நம்பிக்கையை வழங்குவதோடு மட்டுமன்றி, இதனை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையப் போகின்றது என்பதற்கான ஒரு அறிகுறியாகவும் காணப்படுகிறது.

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதால் வழமையாக இதற்குக் கிடைக்கின்ற வாக்குகளும் சிறிசேனவைச் சென்றடையும். ஐ.தே.கவுக்கு சிறிலங்காவின் கிராமிய வாழ் மக்கள் மத்தியில் பெரிதளவில் ஆதரவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர் குமுடு குசும் குமார குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.தே.கவின் சில அரசியற் தலைவர்கள் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் போது ‘ஏழைகளுக்கு ஆதரவான கோட்பாடுகளை’ இலக்காகக் கொண்டிருந்தனர். ஆனால் 1977ல் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன திறந்த பொருளாதாரக் கோட்பாட்டை அமுல்படுத்திய பின்னர் இந்த நிலை மாற்றமுற்றது. இவரைத் தொடர்ந்து ஐ.தே.க வைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கைப்பற்றினார்” என குமார தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் திரு.ராஜபக்ச கிராமிய சிங்களவர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றார். குறிப்பாக இவரது ‘போர் வெற்றியானது’ இதற்கு மேலும் பலம்சேர்த்தது. இரண்டு தடவைகள் அதிபராகப் பதவியேற்ற பின்னர், திரு.ராஜபக்சவால் கிராமிய வாழ் சிங்கள மக்கள் மத்தியில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கையைக் குறைத்து எடைபோட முடியாது.

இவர்களைப் பொறுத்தளவில் தமிழ்ப் புலிகளை நாட்டிலிருந்து ஒழித்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டிய ஒரு வலிமைமிக்க தலைவராக திரு.ராஜபக்ச நோக்கப்படுகிறார். கிராமியச் சிங்களவர்கள் குறிப்பாக தென் சிறிலங்காவைச் சேர்ந்த கிராமப் பெண்களின் ஆதரவு எப்போதும் மகிந்த ராஜபக்சவுக்கு உண்டு. ‘மிகக் கொடிய யுத்தத்தை நாட்டிலிருந்து ஒழித்து நாட்டைப் பாதுகாத்த ஒரு ஜாம்பவனாக சிங்களக் கிராமப் பெண்கள் திரு.ராஜபக்சவை நோக்குகின்றனர்’ என திரு.இரட்ணதுங்க சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தொழில்வாய்ப்புக்கள் மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்கள் போன்றனவும் ஊழல் மற்றும் சர்வதிகார ஆட்சி போன்றனவும் தற்போது நாட்டைச் சீர்குலைக்கின்றன. இவை கிராமியச் சிங்களவர்களையும் பாதித்துள்ளதால் இவர்களின் வாக்குகள் ராஜபக்சவுக்குக் கிடைக்காது போகலாம் என இரட்ணசிங்க கூறுகிறார்.

ராஜபக்ச தரப்பினர் தமது தேர்தல் பரப்புரையில் அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்றன புனரமைக்கப்பட்டுள்ளமை உட்பட தமது அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகக் குறிப்பிடுகின்றனர்.  ஆனால் தமது நகரங்களில் அல்லது கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் தமக்கான தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடிகிறதா என சிங்கள இளைஞர்கள் கேள்வியெழுப்புவதாகவும் இவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அவநம்பிக்கை கொண்டுள்ளதாகவும் திரு.இரட்ணதுங்க குறிப்பிடுகிறார்.

இதற்கும் அப்பால், கிராமிய இளைஞர்கள் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காக நகரங்களை நோக்கிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. “நகரத்தில் வேலை செய்யும் கிராமிய இளைஞர்கள் வார நாட்களில் நகரங்களில் வேலை செய்துவிட்டு வாரஇறுதிகளில் தமது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். இவர்களும் இதன் உண்மைத்தன்மையை நன்கு உணர்ந்துள்ளனர்” என திரு.குசும் குமார குறிப்பிடுகிறார். “எதிரணி தனக்குச் சாதகமாக கிராமிய மற்றும் நகரப்புற மக்களுக்கு ஏற்ற சில விடயங்களைத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தேர்தல் எமக்கான மிக முக்கிய, தீர்மானம் எடுக்க வேண்டிய செய் அல்லது செத்துமடி என்கின்ற நிலைப்பாட்டை வலியுறுத்துகின்ற ஒன்றாகும்” என்கிறார் குமார.

நகர்ப்புற மக்களை மையப்படுத்தியதாகவே தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக கிராமிய வாழ் சிங்கள மக்கள் நம்புகின்றனர். எதிரணியினர் திரு.ராஜபக்சவுக்குச் சொந்தமான கிராமிய சிங்களவர்களின் வாக்குகளைத் தமதாக்கிக் கொள்வதற்கான முக்கிய பரப்புரைகளை மேற்கொள்கிறார்களா இல்லையா என்பது இன்னமும் தெளிவாகவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட குறிப்பிட்டுள்ளார்.

திரு.ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் பதவியேற்பதற்கு கிராமியச் சிங்களவர்களின் வாக்குகள் போதுமானவையா என்பது இன்னமும் ஒரு வாரத்தில் வெளிச்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *