மேலும்

சிறிலங்கா : ‘அதிபர் ராஜபக்சவும் அவரது அதிகாரம் மிக்க சகோதரர்களும் பதவியை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிப்பார்கள்’

Alan Keenanதற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த காலப்பகுதியை விட இரண்டு ஆண்டுகள் முன்னராகவே அதாவது 2015 ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள நிலையில் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மூன்றாவது தடவையாக அதிபர் பதவியைக் கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

2005ல் முதன் முதலாக சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச 2010ல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இரண்டு முறைதான் அதிபராகப் பதவியேற்க முடியும் என்கின்ற வரையறையை சட்டமூலம் நீக்கி தற்போது மேலும் ஆறு ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்காக அதிபர் தேர்தலை முற்கூட்டியே நடாத்துகிறார்.

68 வயதான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியானது மோசடிகளும் ஊழல்களும் நிறைந்துள்ளது என குற்றம் சுமத்தப்படுவதுடன், ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நீண்ட காலப் போரின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் மேற்கொண்டு வருகிறது.

மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையின் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட ஏனைய 18 வேட்பாளர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடவுள்ளார். சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் எதிரணியின் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதுடன் நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பேன் என சூளுரைத்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் சிறிசேன பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றாலும் கூட தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அலன் கீன், யேர்மனியை தளமாகக் கொண்ட DW  ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் விபரம் இங்கு தரப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

கேள்வி: சிறிலங்காவில் நடைபெறவுள்ள தேர்தலானது தற்போதைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: தேர்தலானது நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இடம்பெற்றால் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரும் என்பதையே பல்வேறு காரணிகள் சுட்டிக்காட்டுகின்றன. எதிரணியின் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கே அதிகளவு வாக்குகள் கிடைக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. இதேவேளையில், சிறிலங்கா அதிபர் ராஜபக்ச அநேக சிங்கள வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுள்ளார். இவர் ஒரு திறமை படைத்த ஒரு அரசியல்வாதியாகவும் விளங்குகிறார். இவர் அரச வளங்கள் அனைத்தையும் தனது தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் வைத்துள்ளார்.

கேள்வி: இந்நிலையில் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுக்கு அதிகளவு ஆதரவு கிடைப்பதற்குப் பதிலாக இவர் எவ்வாறு தேர்தலில் போட்டியை எதிர்கொள்வார்?

பதில்: எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் வரை அதிபர் ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராகவும் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் இவருடன் சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் இணைந்து கொண்டனர். இந்நிலையில் சிறிலங்காவின் ஆளுங் கூட்டணியில் அங்கம் வகித்த ஜாதிக ஹெல உறுமயவும் எதிரணியுடன் இணைந்து கொண்டது.

சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய போரின் போதும் போருக்குப் பின்னரும் ராஜபக்சவின் கடும்போக்கு அரசியலை ஆதரித்த முதன்மையான கட்சியாகும். இக்கட்சியானது சிறிசேன மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி எதிரணியுடன் இணைந்ததன் பின்னர் ஆளுங் கூட்டணியிலிருந்து விலகியது. இது ஆளுங்கூட்டணியை பலவீனப்படுத்தியுள்ளதுடன், ராஜபக்சவின் வெற்றியையும் கணிசமானளவு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கேள்வி: ராஜபக்சவை விட சிறிசேனவின் ஆட்சித்திறன் எவ்வாறானதாக இருக்கும்?

பதில்: சிறிலங்காவின் அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதைத் தேர்தல் விளக்கவுரையாகக் கொண்டுள்ள எதிரணியின் பிரதான பொது வேட்பாளராக சிறிசேன களமிறங்கியுள்ளார். சிறிசேன அதிபராகப் பதவியேற்று 100 நாட்களில் அரசியல் யாப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் மற்றும் காவற்துறை, மக்கள் சேவை, நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களைக் கண்காணிப்பதற்கான சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள ஒழுங்குபடுத்தப்படும் என சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.

2005ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்ச உட்பட சிறிலங்காத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் அரசியல் யாப்பில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த போதிலும் நிறைவேற்று அதிபர் முறைமையை ஓழிப்பதற்குப் பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கப்பால் சிறிசேனவின் எதிரணியானது நல்லாட்சிக்கான சில சீர்திருத்தங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளது.

கேள்வி: சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் சந்திக்கும் பிரதான சவால்கள் எவை?

பதில்: சிறிசேன இத்தேர்தலில் வெற்றி பெற்றால், இவர் நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதில் சவால்களைச் சந்திப்பார். இதற்கு அரசியல் யாப்பில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது புதிய நாடாளுமன்றுக்கான தேர்தலின் மூலம் சிறிசேன வெற்றி பெற முடியும். இதனால் சிறிசேனவின் எதிரணியின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலானது தீவிர பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

அவசியமான தடைகள் தாண்டப்பட்டால், சிறிசேனவின் எதிரணியானது சில முக்கிய விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வதில் சவால்களைச் சந்திக்கும். அதாவது போருக்குப் பின்னான மீளிணக்கப்பாடு, பொறுப்புக் கூறுதல், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சகல சமூகங்களுக்கும் பொருளாதார உதவிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு கோட்பாட்டு விவகாரங்களில் ஒருமித்த தீர்வை எட்டுவதில் எதிரணிக்குள் இழுபறி நிலை ஏற்படும்.

ராஜபக்ச இத்தேர்தலில் வெற்றியடைந்தால் இவரது கையானது உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியில் பலப்படுத்தப்படும். இல்லாவிட்டால் இவரது அரசாங்கமானது அடுத்த மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பல்வேறு தீவிர விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

உள்நாட்டில் ராஜபக்ச தமிழ் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியேற்படும். அத்துடன் பௌத்த ஆயுதக் குழுக்களால் தாக்கப்படும் முஸ்லீம் மக்களினதும் கத்தோலிக்க மதத்தவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போதைய எதிரணியால் முதன்மைப்படுத்தப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ராஜபக்ச மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதானது சட்டத்திற்கு அப்பாற்பட்டது என பெருமளவான சிறிலங்கர்கள் கருதுகின்றனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவருக்கான சவால்கள் மேலும் தீவிரமாகும். மீளவும் ராஜபக்ச அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவார் எனவும் அல்லது தற்போதைய நாடாளுமன்றக் காலத்தை நீட்டிப்பதற்குச் சாதகமான கருத்துவாக்கெடுப்பு நடாத்துவதற்கான அழைப்பு விடுக்கப்படும்.

கேள்வி: இத்தேர்தலில் சிறிலங்கா வாழ் தமிழ் மக்கள் எவ்வாறான பங்களிப்பை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது?

பதில்: கெட்டவாய்ப்பாக, சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 12 சதவீதத்தைக் கொண்ட தமிழர்கள் தொடர்பாக ராஜபக்சவினதோ அல்லது சிறிசேனவினதோ தேர்தற் கால நிகழ்ச்சி நிரலில் காணப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் நிலவும் இராணுவ ஆட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை முடமாக்குதல், பயனுள்ள அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் சமரசங்களை மேற்கொள்ளத் தவறுதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மீது நீதி எட்டப்படாமை போன்ற முக்கிய விவகாரங்கள் தொடர்பாக எதிரணியினர் தமது தேர்தற் கால விளக்கவுரையில் எவ்வித தீர்வையும் முன்வைக்கவில்லை.

சிறிலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட எந்தவொரு போர்க் குற்றங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் சிறிசேன கூட்டுச் சேர்ந்துள்ளதானது பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் அதிகாரக் குவிப்பு மற்றும் நிறைவேற்று அதிகார முறைமை போன்றவற்றை ஒழிப்பதாக சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில் இதன்மூலம் ஜனநாயக அரசியல் சீர்திருத்தம் ஒன்றைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தமக்கு நன்மை பயக்கும் என்பதைக் கருத்திற் கொண்டு சிறிலங்கா வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியானது தனது ஆதரவை சிறிசேனவுக்கே வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக ஆதரிக்காவிட்டாலும் கூட மறைமுக எதிரணியின் பொது வேட்பாளருக்கே தமது ஆதரவை வழங்குவார்கள்.

சிறிலங்காவின்  தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை விட்டு வெளியேறுவதுடன் அரசியல் யாப்பு மீளவும் ஜனநாயக மயப்படுத்தப்படும் போது மட்டுமே தமிழ் மக்களின் தற்போதைய மற்றும் நீண்ட கால அரசியற் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் இவையெல்லாம் இடம்பெறும் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் காணப்படவில்லை.

கேள்வி: நெருக்கமான தேர்தல் முடிவுகளால் எவ்வாறான ஆபத்து ஏற்படும்?

பதில்: சிறிசேன தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றாலும் கூட சிறிலங்கா அதிபர் ராஜபக்சவும் அவரது அதிகாரம் மிக்க சகோதரர்களும் பதவியை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிப்பார்கள் என்கின்ற அச்சம் தற்போது சிறிலங்காவில் எழுந்துள்ளது. சிறிசேன குறுகிய வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறும் போது நாட்டில் நிச்சயமற்ற ஒரு சூழல் உருவாகலாம். அதிபர் தேர்தலில் சிறிசேனவும் ராஜபக்சவும் மிகவும் நெருக்கமான வாக்குகளைப் பெற்றால் நாட்டில் அதிக வன்முறைகள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளது. இதனால் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். எதிரணியினரால் சட்ட ரீதியற்றது எனக் கருதப்படும் நடவடிக்கைகள் மூலம் ராஜபக்ச தான் வெற்றி பெற்றதாக அறிவித்தால், தற்போது ராஜபக்சவினதும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவினதும் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவத்தினர் ராஜபக்சவின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்கின்ற அச்சம் நிலவுகிறது. இவ்வாறான சூழல் நிச்சயமாக நிகழும் என நம்ப முடியாது. ஆனால் எதிரணியினரும் இராஜதந்திரிகளும் இவ்வாறு எதிர்வுகூறுகின்றனர்.

கேள்வி: இவ்வாறான ஒரு சூழலில் பௌத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேன எவ்வாறான பங்கை வழங்கும்?

பதில்: தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படுவதாக நம்பப்படும் பொது பல சேன ராஜபக்சவின் மீள் தேர்தலுக்கான தனது ஆதரவை வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மை மத சமூகங்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்கு எதிராக பொது பல சேன பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக பொது பல சேன மிகவும் அமைதி காத்து வருகிறது. இந்நிலையில் முஸ்லீம் வாழும் இடங்களில் எதிரணியின் பரப்புரையைக் குழப்புவதற்காக அல்லது எதிரணியை அச்சுறுத்துவதற்காக இந்த அமைப்பானது தேர்தலுக்கு முன்பாக அல்லது அதற்குப் பின்னர் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

கேள்வி: சிறிலங்காவில் ஏற்படும் தேர்தல் குழப்பங்களைக் குறைப்பதற்கு அனைத்துலக சமூகம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்?

பதில்: ராஜபக்ச அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் குறிப்பாக சீனா, இந்தியா, யப்பான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்புச் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக அரசாங்கங்களும் மேற்குலக நாடுகளும் தேர்தலுக்குப் பின்னரும் முன்னரும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என தேர்தலில் போட்டியிடும் சிறிலங்காவின் இரு பெரும் கட்சிகளிடமும் வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் கோரிக்கை விடுக்க வேண்டும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பாளர்களை நிறுத்துவதற்கும் நாடு முழுவதிலும் வினைத்திறனான தேர்தற் கண்காணிப்பு இடம்பெறுவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதிப்பதற்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ராஜபக்ச அரசாங்கமானது ஜனநாயக நடைமுறையை மதிக்க வேண்டும் எனவும் வன்முறைகள் ஊடாக அல்லது மேலதிக அரசியல் யாப்பு வரையறைகளின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடாது எனவும் அனைத்து அனைத்துலக நாடுகளும் ஒரு தெளிவான செய்தியை ராஜபக்சவுக்கு விடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *