தாய்லாந்து துணைப் பிரதமருக்கு இராஜதந்திர அங்கீகாரம் வழங்கப்படவில்லையா?
தாய்லாந்து துணைப் பிரதமர் சுபஜீ சுதும்புன் (Suphajee Suthumpun) அண்மையில் மேற்கொண்ட சிறிலங்கா பயணம் முற்றிலும் தனிப்பட்டது என்றும், அவர் கோரிய அனைத்து மரியாதைகளும் சிறிலங்கா அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மிஹிந்தலைக்கு அவர் சென்றிருந்தபோது, சிறிலங்கா அரசாங்கம் அவருக்கு உரிய இராஜதந்திர அங்கீகாரத்தையோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளையோ வழங்கத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து துணைப் பிரதமர் பௌத்த பக்தர்களுடன் இணைந்து மிஹிந்தலையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே சிறிலங்கா வந்திருந்தார்.
இந்த பயணம் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டதால், அவருடன் வேறு எந்த அரசாங்க அதிகாரிகளும் வரவில்லை.
தாய்லாந்து தூதரகம் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வறையைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில மரியாதைகளை கோரியிருந்தது, அவை சிறிலங்கா அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
தாய்லாந்து துணைப் பிரதமர் இதற்கு முன்பும் இவ்வாறான சமய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகத் தனிப்பட்ட முறையில் சிறிலங்கா வந்துள்ளார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய இராஜதந்திர மரியாதைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையிலேயே, இந்த தெளிவுபடுத்தல் வெளியாகியுள்ளது.
