மேலும்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு – ஐ.நாவிடம் முறையிட்ட பீரிஸ் குழு

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின்  வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது.

மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த ஆகியோர் நேற்று  கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரே பிரான்சேயைச் சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளனர்.

நீதித்துறையில் உருவாகி வரும் சூழல் குறித்து ஐ.நா.வின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக இந்தச் சந்திப்பை மேற்கொண்டதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்திற்கு சட்டத் துறையினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த முன்னெடுப்பை சிவில் சமூகமும் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசாங்கம் புதிய பிரச்சினைகளை உருவாக்கி வருவதாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *