அதிகரிக்கும் எரிசக்தி நெருக்கடி – விரைவில் மின்வெட்டும் நடைமுறைக்கு வரும்
தரமற்ற நிலக்கரி மற்றும் தடைப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதியினால், சிறிலங்காவில் மின் உற்பத்தி கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நீண்டகால மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிலக்கரி மின் நிலையங்கள் முழுத் திறனில் இயங்காததாலும், மத்திய கிழக்கிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றுமதி தாமதமடைவதாலும், ஒரு மணி நேரம் வரையிலான இரவு நேர மின்வெட்டு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், பகல் நேர மின்சாரமும் அழுத்தங்களுக்கு உள்ளாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்ட நிலக்கரி மின்நிலையங்கள், தரமற்ற நிலக்கரியால் தற்போது 120 தொடக்கம் 150 மெகாவாட் குறைவாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
நிலக்கரி விசையாழிகளை முழுத் திறனில் இயக்குவதற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, போதுமானதாக இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரண்ட வானிலையால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
இதற்கு முன்னர் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு குறைந்து வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரானிலிருந்து சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கான மசகு எண்ணெய் இறக்குமதி, மோதல்களால் தடைப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மசகு எண்ணெய் விலை மின்சார உற்பத்திச் செலவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இது மேலும் சவாலாக அமையும்.
நிச்சயமற்ற எரிபொருள் இறக்குமதியை நம்பி, தடையின்றி மின்சார உற்பத்தியைத் தொடர்ந்தால், அது பேரழிவாக அமையக்கூடும் மின்சார உற்பத்தியுடன் தொடர்புடைய அதிகாரி எச்சரித்தார்.
இரவு நேர மின்வெட்டு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கலாம், கல் நேர மின்சாரமும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம்.
எரிபொருள் கையிருப்பு மோசமடைந்தால், நாளாந்த மின்வெட்டு மூன்று அல்லது நான்கு மணி நேரம் வரை நீடிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
