மேலும்

ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சிறிலங்கா மகாபோதி சங்கத்தின் தலைவர் வண. பாணகல உபதிஸ்ஸ தேரர்,  விமான நிலைய முனையத்திற்குள் நுழைவதற்காகப் பெற்றிருந்த சிறப்பு அனுமதிப்பத்திரத்தை நீடிக்குமாறு கோரி சமர்ப்பித்த கடிதமே ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கத்திற்குக் காரணம் என சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

கடந்த 2025.12.29 ஆம் நாள் சிறிலங்கா மகாபோதி சங்கத்தின் கடிதத் தலைப்பில், வண. பாணகல உபதிஸ்ஸ தேரர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அதில், கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அனுமதிப்பத்திரம் டிசம்பர் 31 ஆம் நாளுடன் நிறைவடைவதால், அதனை அடுத்த ஆண்டிற்கு நீடிக்குமாறு கோரியிருந்தார்.

தேரரின் அனைத்துலக சமயப் பணிகளைக் கருத்திற் கொண்டு, அதனை அடுத்த ஆண்டிற்கு நீடிக்குமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பொன்றை இட்ட அமைச்சர் அனுர கருணாதிலக, மேலதிக நடவடிக்கைகளுக்காக அதனை முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரமவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதன்போது, சிறப்பு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாக முன்னர் ஏற்பட்ட சில அனுபவங்களை முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம அமைச்சருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அனுர கருணாதிலக  தகுந்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய, கடந்த 9 ஆம் நாள் பாணகல உபதிஸ்ஸ தேரருக்கு முன்னாள் தலைவர் ஹ்ர்ஷ அபேவிக்ரமவினால் டிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

தேரரின் கோரிக்கைக்கு அமைய இந்தக் கடிதம், ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும்,  ஹர்ஷ அபேவிக்ரமவுக்கும் இடையே எந்தக் கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் சில காரணங்களுக்காக தலைவர் பதவி குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இதற்காக, கடந்த 21 ஆம் நாள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் ஹர்ஷ அபேவிக்ரமவுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலை அடுத்தே, அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *