கொழும்பு மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது- 2 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வராய் கெலி பால்தசார் சமர்ப்பித்த 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக மாநகர முதல்வரால் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, 58 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜோஹாரா புஹாரியை, அந்தக் கட்சி உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர், இது தொடர்பாக, புஹாரிக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷேன் டானியல் ராமின் கட்சி உறுப்பினர் பதவியை ஐக்கிய மக்கள் சக்தியும் உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.
கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது கட்சியின் தீர்மானத்தை கடைப்பிடிக்கத் தவறியதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சில உறுப்பினர்கள் சபைக்கு வராததால் தாங்கள் தோல்வியடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் ரிசா ரசூக் தெரிவித்துள்ளார்.
இன்று நாரஹேன்பிட்டி காவல்துறையினால் ஒரு உறுப்பினர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
எங்கள் உறுப்பினர்களில் இருவரைக் காணவில்லை, அவர்களின் தொலைபேசிகள் செயல்படவில்லை.
ஒரு உறுப்பினரின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் வாக்கெடுப்புக்கு முன்னதாக வெளியேற வேண்டியிருந்தது.
ஒரு உறுப்பினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார். பெரும்பான்மை இல்லாததால் நாங்கள் தோற்கவில்லை, ஆனால் எங்கள் உறுப்பினர்களில் சிலர் வராததால்தான் தோல்வியடைய நேரிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
