வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு அவசியம்
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் நேற்று நடத்திய சந்திப்பின் பின்னர், அதிபர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும், அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை பிற்பகல் அதிபர் செயலகத்தில் நடைபெற்றது.
மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வினை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார்.
அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு, இந்தச் சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் ஆலோசனை வழங்கினார்
வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் அரசுக் கட்சி பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில், தமிழ் அரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில், தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், சாணக்கியன் இராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. சிறிநேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மற்றும் சிறிலங்கா அதிபரின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அதிபரின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் பங்கேற்றனர் என்று அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



