மேலும்

அமெரிக்கா – சிறிலங்கா இடையே பாதுகாப்பு உடன்பாடு கைச்சாத்து

அமெரிக்காவும் சிறிலங்காவும், பாதுகாப்புத் தொடர்பான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திட்டுள்ளன.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், அரச பங்காண்மை  திட்டத்தின் (SPP) கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு இடையே பாதுகாப்பு கூட்டாண்மையை முறைப்படுத்தும் வகையில் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்பாடு, கூட்டுப் பயிற்சி மற்றும் தொழில்முறை பரிமாற்றங்களில் கவனம் செலுத்தப்படுவதுடன், இயங்குதன்மை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

அத்துடன், கடத்தல், ஒழுங்கற்ற இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருளை  எதிர்த்துப் போராடுவதற்கான கடல்சார் கள விழிப்புணர்வில் ஒத்துழைப்பு, மருத்துவ மற்றும் பொறியியல் ஆதரவு உட்பட காவல்படையின் இராணுவ-பொதுமக்கள் இரட்டை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி நெருக்கடிகளுக்கு பதிலளித்தல் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றையும்,  பணி திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விமான நடவடிக்கைகள்மற்றும் பேரிடர் தயார்நிலை, பதிலளிப்பு மற்றும் மீட்புக்கான இராணுவ-பொதுமக்கள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றையும் இந்த கூட்டாண்டை உள்ளடக்கியதாக இருக்கும்.

அமெரிக்கத் தரப்பில், சிறிலங்காவிற்கான  தூதுவர்  ஜூலி சங், மொன்டானா தேசிய காவல்படையின் துணை அதிகாரி, பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன் (Brigadier General Trenton Gibson) ஆகியோரும், சிறிலங்கா  பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல்  சம்பத் துயகொந்தாவும், இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இது அமெரிக்க-சிறிலங்கா பாதுகாப்பு உறவுகளில் ஒரு மைல் கல்லைக் குறிக்கிறது என்றும், இந்தோ-பசுபிக் பகுதியில் பிராந்திய உறுதித்தன்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை இராணுவ ஒத்துழைப்புக்கு இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க-சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜூலி சங்,  இந்த புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட சிறிலங்காவுடனான இந்த  கூட்டாண்மை மூலம், பாதுகாப்பான இந்தோ-பசுபிக்-கட்டமைக்கும் நம்பிக்கை, தயார்நிலை மற்றும் நீடித்த அமைதிக்கான எங்கள் பகிரப்பட்ட தீர்மானத்தை வலுப்படுத்துகிறது.”எனக் குறிப்பிடடுள்ளார்.

அதேவேளை,  இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த,

“இந்த உடன்பாடு, சிறிலங்காவின் பாதுகாப்பு திறன்களை மேலும் மேம்படுத்தும் மற்றும் அமெரிக்காவுடனான நீடித்த கூட்டாண்மையை வலுப்படுத்தும் ஒரு முற்போக்கான முயற்சியை பிரதிபலிக்கிறது.

பல ஆண்டுகளாக,  இரு நாடுகளும் இராணுவப் பயிற்சி, பேரிடர் நிவாரணம் மற்றும் பாதுகாப்பு பரிமாற்றங்கள், பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பது போன்ற துறைகளில் ஒத்துழைத்துள்ளன.

இந்த உடன்பாடு, கட்டமைப்பு ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும், திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்கு பங்களிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மொன்டானா தேசிய காவல்படையின்  பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன் கருத்து வெளியிடுகையில், “எங்கள் சிறிலங்கா சகாக்களுடன் தோளோடு தோள் நிற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒன்றாக, நமது இரு நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வலிமை, நம்பிக்கை மற்றும் நீடித்த பிணைப்புகளை உருவாக்குவோம்.”என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *