இந்திய அமைச்சர்களுடன் சஜித் சந்திப்பு
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய அரசின் அழைப்பின் பேரில், 3 நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி சென்ற சஜித் பிரேமதாச, நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என இந்தச் சந்திப்பிற்குப் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில், பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் சஜித் பிரேமதாச நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும், இந்திய உலக விவகார சபையின் ஏற்பாட்டில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டதுடன், மீனவர் பிரச்சினை உட்பட இந்தியா – சிறிலங்கா இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பில் உரையாற்றியுள்ளார்.


