காணாமல் போனோரின் நினைவு தினம் – அழைப்புக்கு பதிலளிக்காத சிறிலங்கா அதிபர்
சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனோருக்கான நினைவுச்சின்னத்தில், நாளை நடைபெறவுள்ள காணாமல் போனோருக்கான 35வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு சிறிலங்கா அதிபர் அனுர குமார திசாநாயக்க தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
இது குறித்து காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபருக்கு ஒக்ரோபர் 13 மற்றும் 21 ஆம் திகதிகளில் பல எழுத்துப்பூர்வ அழைப்புகள் அனுப்பப்பட்ட போதிலும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
இந்த நிகழ்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவோ அல்லது 1989 தெற்கு வன்முறை மற்றும் உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சந்திப்பதற்கான திகதியை வழங்கவோ இல்லை என்று காணாமல் போனோரின் குடும்ப ஒன்றிய தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த குடும்ப உறுப்பினர்களின் கண்ணீரைத் துடைப்பதாக நீங்கள் தேர்தலுக்கு முன்பு உறுதியளித்தீர்கள், ஆனால் உங்களின் தொடரும் மௌனம் கோபத்துடன் கலந்த விரக்தியையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரிட்டோ பெர்னாண்டோ சிறிலங்கா அதிபருக்கு எழுதியுள்ள அண்மைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, நீதி அமைச்சு மற்றும் அதிபர் செயலகத்திற்கு வெளியே அமைதியான போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
