மேலும்

வல்வைப் படுகொலைகளுக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி மனு

1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் நடந்த படுகொலைகளில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கொலைகள் மற்றும் அழிவுகளுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (4.5 பில்லியன் இலங்கை ரூபா) இழப்பீடு கோரியுள்ளனர்.

36 ஆண்டுகளுக்கு முன்னர்,  இந்திய அமைதிப்படை  மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் அழிவுகளுக்கான இந்த இழப்பீட்டுக் கோரிக்கை, சிறிலங்கா அரசாங்கம் நிறுவியுள்ள இழப்பீட்டு பணியகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையானது, சிறிலங்கா மண்ணில் வெளிநாட்டு இராணுவத்தால் செய்யப்பட்ட ஒரு பாரிய அட்டூழியத்திற்கு இழப்பீடு கோரும் முதல் கோரிக்கையாகும்.

நேரில் கண்ட சாட்சியங்களைக் கொண்ட அறிக்கையுடன் கூடியதாக இந்த கோரிக்கை மனு முன்வைக்கப்பட்டுள்ளது.

1989 ஓகஸ்ட் 2 முதல் 4ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடந்த  தாக்குதல்களின் போது, குறைந்தது 66 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையின் போது, 123 வீடுகள் மற்றும் 43 கடைகள் அழிக்கப்பட்டன, மேலும் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

“குற்றவாளிகள் வெளிநாட்டு படையினராக இருந்தாலும், இந்த அட்டூழியங்கள் சிறிலங்காவின் இறையாண்மை பிரதேசத்திற்குள் நடந்தன, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறிலங்கா குடிமக்கள்.

அதன்படி, இந்த துயரத்தின் போது பாதிக்கப்பட்ட தனது சொந்த மக்களை அங்கீகரித்து, இழப்பீடு வழங்கி, நீதியை மீட்டெடுக்க சிறிலங்கா அரசாங்கம் முழுப் பொறுப்பையும் கொண்டுள்ளது” என்று வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் பிரதிநிதி என். அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *