சிறிலங்காவின் பொருளாதார சீர்திருத்தங்களை கண்காணிக்கிறது ஜிகா
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனகா அகிஹிகோவை (Dr. Tanaka Akihiko) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
டோக்கியோவில் உள்ள இம்பீரியல் விடுதியில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜப்பானின் சிறிலங்காவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை கலாநிதி அகிஹிகோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் நீண்ட காலமாக தாமதமாகி வரும் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலையான பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாக தனியார் துறை, தொழில் மற்றும் விவசாயத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.