மேலும்

தெரியாத தேவதையா – தெரிந்த பிசாசா? : ஈழத்தமிழ் மக்கள் தமது வாக்குகளை யாருக்கு வழங்குவார்கள்?

mahinda-maithripalaயாழ்ப்பாணம், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தில் தற்போது ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறுபான்மைத் தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் காணப்படுகிறது.

இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் MEERA SRINIVASAN எழுதியுள்ள சிறிலங்கா தேர்தல் பற்றிய மூன்றாம் ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காத் தீவில் தொடரப்பட்ட மிகக் கொடிய யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வீதிகள் மற்றும் தொடருந்துப் பாதைகளை புனரமைத்துள்ளதுடன், மின்சார வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கக் கூடிய அளவுக்கு போருக்குப் பின்னான மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் எதனையும் ராஜபக்ச முன்னெடுக்கவில்லை என வடக்கு மாகாண தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் போரின் வடுக்களிலிருந்து மீள்வதற்குப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ளும் நிலையில், வடக்கு மாகாணம் இராணுவமயமாக்கப்படுவதுடன், மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்படுகிறது. இதேபோன்று வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தமக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் முன்னெடுக்க முடியவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தில் தற்போது ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறுபான்மைத் தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் காணப்படுகிறது.

சிறிலங்காத் தீவில் மூன்று பத்தாண்டாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமும் அதன் முடிவும் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக உள்ளன. அதாவது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ளனர். நாட்டில் நிலைகொண்டிருந்த தமிழ்ப் புலிகளை சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச அழித்ததால் சிங்கள மக்களின் வாக்குகளை இவர் பெறுவார் என நம்பப்படுகிறது.

வடக்கில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் உண்மையில் தமது வாழிடங்களில் சமாதானமும் அமைதியும் எட்டப்படவில்லை என தமிழர்கள் கருதுகின்றனர். இதனால் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவை எதிர்த்தே தமது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பின்னர் திரு.ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எவ்வித பயனுள்ள அரசியற் தீர்வையும் வழங்கவில்லை என கொழும்பைத் தளமாகக் கொண்டு வெளிவரும் ‘தினக்குரல்’ செய்தித்தாளின் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் குறிப்பிடுகிறார். “போர் என்கின்ற காரணத்தினால் மட்டும் தமிழ் மக்கள், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கவில்லை. இவர் நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மையினரையும் அடிப்படையில் எதிர்த்து நிற்கின்ற ஒருவர் என திரு.ராஜபக்சவை தமிழ் மக்கள் நோக்குகின்றனர்” என ஆசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஆதரவை சிறிலங்கா அதிபர் ராஜபக்ச குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் பெற்றிருக்க முடியும். ஒன்று மே 2009ல் மற்றையது செப்ரெம்பர் 2013ல் திரு.ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்கியிருக்க முடியும்.

“போர் முடிவடைந்ததன் பின்னர் திரு.ராஜபக்ச இதயசுத்தியுடன் கூடிய மீளிணக்கப்பாட்டை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இதன்பின்னர், வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அதனைச் செயற்படுத்துவதற்கான தனது ஆதரவை திரு.ராஜபக்ச வழங்கவில்லை. இவ்விரு வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை திரு.ராஜபக்ச வழங்கியிருந்தால் தமிழ் மக்களின் வாக்குகளை இவர் பெற்றிருக்க முடியும்” என திரு.தனபாலசிங்கம் தெரிவித்தார்.

இவ்விரு வாய்ப்புக்களையும் திரு.ராஜபக்ச தவறவிட்டுவிட்டார். இதன்மூலம் தமிழ் மக்களை சிறிலங்கா அதிபர் ஓரங்கட்டியுள்ளார்.

வடக்கில் ராஜபக்ச எதிர்ப்பு உணர்வு வெளிப்படையாக உள்ள அதேவேளையில், 1994ல் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்ட போது தமிழர்கள் தமது வாக்குகளை அளித்ததுபோல் தற்போது போட்டியிடவுள்ள எதிரணியின் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதளவில் ஆதரவு காணப்படவில்லை என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ நாளேட்டின் நிறைவேற்று ஆசிரியர் தேவநாயகம் பிறேமானந் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவிற்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பெரிதளவில் வித்தியாசம் உள்ளதாக வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதவில்லை. “இரண்டு பேரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் போரின் போது ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். எதுஎவ்வாறிருப்பினும் தமிழ் மக்கள் ராஜபக்சவைப் பதவியிலிருந்து தூக்கி எறிவதற்காக திரு.சிறிசேனவுக்குத் தமது வாக்குகளை வழங்குவார்கள்” என திரு.தேவநாயகம் பிறேமானந் குறிப்பிட்டுள்ளார்.

“மகிந்தவுக்கு எதிராக வாக்குகளை வழங்க வேண்டும் என்றே தமிழ் மக்கள் கருதுகிறார்களோ ஒழிய இதனை சிறிசேனவுக்கு ஆதரவான வாக்குகளாக நோக்க முடியாது” என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரு.சிறிசேனவுக்கு ஆதரவளிக்குமாறு கூறியிருப்பினும் இந்தத் தேர்தல் ‘தமக்கான தேர்தல்’ என தமிழ் மக்களின் ஒருசாரார் கருதுவதாகவும் தேர்தலுக்குப் பின்னர் தமது வாழ்வு எவ்வாறு மாறப்போகிறது என்பதைத் தமிழ் மக்களால் எதிர்வுகூற முடியவில்லை எனவும் திரு.பிறேமானந் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கப்பால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்கள் நீண்ட காலமாக முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கைகள் தொடர்பான தமது கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. அதாவது அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கையை முன்வைத்துள்ள போதிலும் இது தொடர்பாக இவ்விரு வேட்பாளர்களும் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை.

2005ல் சிறிலங்கா அதிபர் தேர்தல் இடம்பெற்ற போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு அறிவித்ததால் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமது வாக்குகளை வழங்கவில்லை. இதனால் ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட திரு.ராஜபக்ச சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் அதிபராகப் பதவியேற்றார்.

2010ல், தமிழ் மக்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தமது வாக்குகளை வழங்குவதெனத் தீர்மானித்தார்கள். இத்தேர்தலில் போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்ட அதிபர் ராஜபக்சவை எதிர்த்து உள்நாட்டுப் போரில் சிறிலங்கா இராணுவத்தை வழிநடாத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார்.

இத்தடவை தமிழ் மக்கள் திரு.ராஜபக்ச மீது தாம் கொண்டிருந்த முழு நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள். திரு.சிறிசேன இத்தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் நாட்டில் ஜனநாயக ஆட்சி கட்டியெழுப்பப்படும் எனவும் இதன்மூலம் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்ள முடியும் எனவும் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இதனாலேயே இத்தேர்தலில் திரு.சிறிசேனவை ஆதரிப்பதெனத் தீர்மானித்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தேர்தல் தொடர்பான தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் போது குறிப்பிட்டிருந்தார்.

“ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான வாக்குகள் ஜனநாயகத்திற்கு ஆதரவான வாக்குகள்” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை முஸ்லீம் மக்கள் உட்பட சிறுபான்மை மக்கள் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரித்துத் தமது வாக்குகளை வழங்கும் போது இவர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவது மிகவும் கடினமான ஒன்றாகும் எனவும் திரு.விக்னேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெரியாத தேவதையான திரு.சிறிசேனவை விட தெரிந்த பிசாசான தனக்கு வாக்களிக்குமாறு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களிடம் கேட்டுக் கொண்டார். தமிழ் மக்கள் தமது வாக்குகளை யாருக்கு வழங்குவார்கள் என்பதை இதனைக் கொண்டு ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *