எமக்கு புத்திகூற வேண்டாம் – ஐ.நா பேச்சாளர் மீது பாய்கிறது சிறிலங்கா
சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் கருத்தை அவரது பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று, ஐ.நா பொதுச்செயலர் ஏற்கனவே வெளியிட்ட கருத்தை மீளவும் நினைவுபடுத்தியிருந்தார்.
இது தேவையற்ற, அநாவசியமான கருத்து என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது.
சிறிலங்கா 1931ம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக அடிப்படையில், உரிய காலக் கிரமத்தில், அமைதியாக தேர்தல்களை நடத்தி வருகிறது என்றும், வாக்காளர்கள் சுதந்திரமாகவும் பெரும் எண்ணிக்கையிலும் வாக்களித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல்களை நடத்துவதில் பல பத்தாண்டு பாரம்பரியத்தைக் கொண்ட சிறிலங்கா, 2015 அதிபர் தேர்தலையும், அமைதியாகவும், இயல்பாகவும் நடத்தும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது.