சிறிலங்கா விமானப்படைக்கு மேலதிகமாக 4,261 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சிறிலங்கா விமானப்படைக்கு ஆளில்லா விமான அமைப்பை (ட்ரோன்) நிறுவுவதற்கு 4,261 மில்லியன் ரூபாவை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வது குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழு, 2026-ஆம் ஆண்டிற்கான 8-வது மேலதிக மதிப்பீட்டை இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த மேலதிக மதிப்பீடானது, சிறிலங்கா விமானப்படைக்குத் தேவையான மேலதிக நிதியை ஒதுக்குவதற்கு நாடாளுமன்ற அனுமதியைக் கோருகிறது.
இதற்காக ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்தோ அல்லது வேறு ஏதேனும் அரச நிதியத்திலிருந்தோ 4,261 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மோசமான வானிலை மற்றும் அதனால் உருவாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், மாறிவரும் செயல்பாட்டுச் சூழலுக்கு ஏற்பச் செயற்படவும், சிறிலங்கா விமானப்படைக்கு ஆளில்லா வான்வழி வாகன (UAV) அமைப்பை நிறுவுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.
இது 2026ஆம் ஆண்டில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடாக விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிதியாகும்.
