சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க தொடங்கியது உயர்நீதிமன்றம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட 26 சிறப்புத் தீர்மான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்று தொடங்கியது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் அச்சலா வெங்கப்புலி, சம்பத் அபயகோன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மூத்த ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன சார்பில் முன்னிலையான அதிபர் சட்டவாளர் ரொமேஷ் டி சில்வா, முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் 21-வது பிரிவின் கீழ், தடுப்புக்காவல் உத்தரவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் வழங்குவதன் மூலம், நீதித்துறை அதிகாரம் நடைமுறையில் பறிக்கப்படுவதாக வாதிட்டார்.
இந்த ஏற்பாடு தனிநபர் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்துவதாகவும், நீதித்துறை மேற்பார்வை இல்லாதிருப்பது நீதித்துறை அதிகாரத்தின் அரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் விதிகள், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
அந்த உடன்படிக்கை பிணை வழங்குவதற்கு வழிவகை செய்யும் நிலையில், இந்தச் சட்டமூலம் அதில் உள்ள குற்றங்களுக்குப் பிணை வழங்குவதைத் தடுக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ், இந்தச் சட்டமூலத்தின் 14(3)-வது பிரிவு, நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல், இந்தச் சட்டத்தின் கீழ் நடைபெறும் நீதித்துறை நடவடிக்கைகளைப் பற்றிச் செய்திகளை வெளியிடுவதற்கு முழுமையான தடையை விதிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த ஏற்பாடு, நீதிமன்றச் செய்தியாளர்கள் முன் அனுமதியின்றி இத்தகைய நடவடிக்கைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், இந்தச் சட்டமூலத்தின் 4(2)-வது பிரிவின் கீழ், ஒருவருடன் தொடர்பில் இருத்தல் அல்லது அவருடன் காணப்படுதல் போன்ற காரணங்களுக்காக ஒருவரை குற்றவாளியாகக் கருதும் நிலை (criminalisation by association and appearance) ஏற்படுவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
ஒரு நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் உறுப்பினரா என்பதைத் தீர்மானிக்கும்போது, நீதிமன்றம் பல்வேறு சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ள இந்த 4(2)-வது பிரிவு இடமளிக்கிறது.
இதில், பிற நபர்களுடனான சந்திப்புகள், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்களால் அடையாளம் காட்டப்படுதல், உடை அலங்காரம், பச்சை குத்துதல், பயன்படுத்தும் மொழி, சைகைகள், குற்றக் கும்பல் உறுப்பினர்களுடனான தொடர்பு மற்றும் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லுதல் போன்ற பல்வேறு காரணிகள் அடங்கும்.
