மேலும்

சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது- சரத் என் சில்வா

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா, எச்சரித்துள்ளார்.

இத்தகைய நபர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் மற்றும் குடிமை உரிமைகளை மீறும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்த கருத்தையும், சரத் என் சில்வா வழிமொழிந்தார்.

சிறிலங்கா அரசாங்கம் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.

முன்மொழியப்பட்ட இந்தச் சட்டங்கள், 1976-ல் நடைமுறைக்கு வந்த, சட்டப்பூர்வ பிணைப்பு கொண்ட அனைத்துலக ஒப்பந்தமான ‘குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை’ (ICCPR) மற்றும் சிறிலங்கா அரசியலமைப்பின் 19-வது திருத்தம் ஆகியவற்றை எவ்வாறு மீறக்கூடும்.

காவல்துறையின் பங்களிப்பு இல்லாமலேயே  சிறிலங்காஇராணுவத்தினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

“இராணுவத்தினர் ஒருவரைத் தங்கள் வசம் 24 மணிநேரம் வைத்திருந்து, அதன் பிறகு சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியும்.

மேலும் 48 மணிநேரம் வரை அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

ஒரு நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்படாமல், 72 மணிநேரம் தடுத்து வைக்கப்படும் நபர்களின் மனநிலை எப்படி இருக்கும்?”

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது.

தங்கள் அரசாங்கம் பலவீனமான நிலையில் இருப்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். புதிய பாதுகாப்புச் சட்டங்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே கொண்டு வரப்படுகின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடந்த இந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ்,

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை, முன்மொழியப்பட்டுள்ள ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும்.

இந்த இரண்டு சட்டமூலங்களும் இணைந்து ஜனநாயகத்தையே அழித்து விடக்கூடும்.

இத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கம் அனைத்துலக அளவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ‘ஜிஎஸ்பி பிளஸ்’ சலுகைகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாகக் கூடும்.

ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன இந்த இரண்டு சட்டமூலங்களையும் கடுமையாகக் கண்டித்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள், சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளுக்கு முரணானவை ஆகும்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படாமலேயே, சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு ஆதரவாக ஆயுதப் படைகளை அரசாங்கம் களமிறக்கக்கூடும்.

அரசாங்கத்தை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்கள், அரசாங்கத்தின் கட்டளைப்படி செயற்படும் காவல்துறை மற்றும் இராணுவத்தின் தயவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

தற்போது நடைமுறையில் இல்லாத வகையில், காவல்துறையினர் மிரட்டியோ அல்லது காவலில் உள்ளவரைத் தாக்கியோ பெறும் வாக்குமூலங்களை, முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும்  சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு , அது காவல்துறையினருக்கும் இராணுவத்திற்கும் நீதித்துறையின் மேற்பார்வை இன்றி நபர்களைத் தடுத்து வைக்கும் அதிகாரத்தை வழங்குகிறது என்பதேயாகும்.

தேசிய மக்கள் சக்தியின்  இந்த உத்தியைத் முறியடிக்க கூட்டு முயற்சியும் அனைத்துலக தலையீடும் தேவை என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *