சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி மருத்துவமனையில் அனுமதி
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய போது, சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட, வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு அருகில் நேற்று அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட சிறிலங்கா காவல்துறையினர் வேலன் சுவாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், நேற்று மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்ட களத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி பிணையில் வெளிவந்து ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் நேற்றிரவு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் , மதத் தலைவரான வேலன் சுவாமி மீது தாக்குதல் மேற்கொண்டு , அவரை காவல்துறை வாகனத்தினுள் தூக்கி வீசிய சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சமய அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
