அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளி சிறிலங்கா
சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன்பாக, அவர் விளக்கமளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் பாதையில், சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பவுபிக் மூலோபாயத்தை ஊக்குவிப்பதற்கும் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பு உட்பட எதிர் தாக்கங்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்க முயற்சிகளுக்கான மையமாக அமைகிறது.
இந்தியப் பெருங்கடலில் உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் சிறிலங்கா அமைந்துள்ளது
அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மற்றும் உலகின் கடல்வழி மசகு எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு அதன் வழியாக பயணம் செய்கின்றன.
சிறிலங்காவின் இருப்பிடம் அதை அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளியாக ஆக்குகிறது.
பதவி உறுதிப்படுத்தப்பட்டால், சிறிலங்கா உள்ள அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.
டிட்வா புயலின் பின்னர் சிறிலங்காவுக்கு அமெரிக்கா 2 மில்லியன் டொலர் அவசர உதவியை வழங்கியுள்ளது.
நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்க இராணுவ மூலோபாய விமான போக்குவரத்து திறன்களைப் பயன்படுத்தியுள்ளது.
இது சிறிலங்காவுடனான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு சான்றாக உள்ளது.
சிறிலங்கா மீள்தன்மை கொண்டதாகவும், பிராந்திய பொருளாதாரத் தலைவராக மாறக்கூடியதாகவும் இருக்கிறது.
கொழும்பு துறைமுகம் அடுத்த ஆண்டுக்குள் சரக்கு கையாளும் திறனை இரட்டிப்பாக்கும்.
இது சிறிலங்காவின் துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் கப்பல் துறைகளில் குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.
பொருளாதார இறையாண்மை தேசிய சுதந்திரத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை வலியுறுத்துகிறேன்.
சிறிலங்கா சீர்திருத்தங்களில் இணைந்து கொள்ள முடிந்தால், அது அமெரிக்க முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்.
அமெரிக்கா திறந்த மற்றும் வெளிப்படையான இருதரப்பு உறவுகளை ஆதரிக்கிறது.
துறைமுகங்கள் உட்பட அதன் இறையாண்மையை உறுதிப்படுத்த சிறிலங்காவுடன் இணைந்து செயல்படும்.
வர்த்தகத்துக்கான நீர்வழிகள் மற்றும் துறைமுகங்களைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், வளர்ந்து வரும் பிராந்திய பாதுகாப்பு பங்காளியாக சிறிலங்காவின் பங்கை ஆதரிப்பதற்கும் அமெரிக்கா சிறிலங்காவுடன் இணைந்து செயல்படும்.
பதவி உறுதிப்படுத்தப்பட்டால், காங்கிரஸுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதுடன், அமெரிக்காவை பாதுகாப்பான, வலுவான மற்றும் வளமானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையை செயற்படுத்த ஒரு இடைநிலை முயற்சியை வழிநடத்துவேன் என்றும் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
