மேலும்

முள்ளிக்குளத்தில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் சிறிலங்காவின்  70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

20 ஆண்டு கண்காணிப்பு காலத்துடன், கட்டமைத்தல்-சொந்தமாக்குதல்-செயல்படுத்துதல் மாதிரியின் கீழ் செயற்படுத்தப்படும் 100 மெகாவாட் திறன் கொண்ட முள்ளிக்குளம் காற்றாலை மின் பூங்காவுக்கு தனியார் துறை முதலீட்டாளர்களிடம் முன்மொழிவுகளை கோர, 2025 பிப்ரவரி 10,ஆம் திகதி எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துலக அளவில்,  போட்டி ஏல செயல்முறை மூலம் முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன. இதன்போது, ஏழு நிறுவனங்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.

ஏலங்களை மதிப்பிட்ட பின்னர்,  அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒப்பந்தங்களை வழங்குவதற்கான மின்சக்தி அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை  அங்கீகரித்துள்ளது.

50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் நிலையங்களையும் விதுல்லங்கா பிஎல்சி மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டோர் நிறுவனம்  ஆகியவற்றின் கூட்டமைப்பு மற்றும்  விண்ட் போர்ஸ் பிஎல்சி ஆகிய றிறுவனங்கள் செயற்படுத்தவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *