சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காகவே, இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கியது உட்பட, கடல்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது தொடர்பாக, இந்த சந்திப்பின் போது, கவனம் செலுத்தப்பட்டதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் இறையாண்மையை மதிக்கும் அதேவேளையில், பகிரப்பட்ட மூலோபாய நலன்களை ஆதரிப்பதே இத்தகைய ஒத்துழைப்பின் நோக்கம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறிலங்கா தனது மீட்பு முயற்சிகளைத் தொடரும்போது, வர்த்தகம், முதலீடு மற்றும் குறுகிய கால உறுதித்தன்மையை உறுதி செய்தல் உள்ளிட்ட பொருளாதார முன்னுரிமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியின் போது இழந்த உயிர்களுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு இரங்கல் தெரிவித்ததுடன், வலுவான இருதரப்பு கூட்டாண்மைக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வலுவான அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக்கின் முக்கியத்துவத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.



