இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைது செய்வதற்கான தடை நீடிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதைத் தடுக்கும், இடைக்கால உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கேணல் கே.எஸ். மத்துமகே தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பரிசீலித்த பின்னர், அவரைக் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை ஜனவரி 29 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன இந்த மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
மனுதாரரின் சார்பாக முன்னிலையான அதிபர் சட்டவாளர் அலி சப்ரி, தனது கட்சிக்காரர் தற்போது தியத்தலாவை இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பணியாற்றும் ஒரு மூத்த இராணுவ புலனாய்வு அதிகாரி என்றும், அவர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கம் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
சட்டமா அதிபர் தரப்பின வாதங்களை கேட்ட பின்னர், கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை நீடித்த நீதிபதிகள், இந்த மனு ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.
