கஜபா – ராஜ்புத் படைப்பிரிவுகள் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி
சிறிலங்கா- இந்திய இராணுவங்களின் இரண்டு வார கால மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று முன்தினம் கர்நாடகாவின் பெலகாவியில் ஆரம்பமாகியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, கூட்டாக ஒருங்கிணைந்து செயற்படுவதே, 11வது மித்ர சக்தி பயிற்சியின் நோக்கம் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சியில், 170 பேர் கொண்ட இந்திய இராணுவத்தின் ராஜ்புத் படைப்பிரிவைச் சேர்ந்த படையினரும், சிறிலங்கா தரப்பில் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த 125 படையினரும் பங்கேற்கின்றனர்.
அத்துடன், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 20 பேரும், சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த 10 பேரும் இந்தப் பயிற்சியில் பங்கெடுக்கின்றனர்.
இரு தரப்பினரும் தாக்குதல்கள், தேடுதல் மற்றும் அழித்தல் பணிகள், உலங்குவானூர்தி மூலமான நடவடிக்கைகள் போன்ற தந்திரோபாய நடவடிக்கைகளைப் பயிற்சி செய்வார்கள் என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
மித்ர சக்தி பயிற்சியின் போது உலங்குவானூர்திகளும், ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு பொறிமுறைகளும் பயன்படுத்தப்படும்.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் சிறிலங்கா படையினரை, இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்தல விமான நிலையத்தில் இருந்து ஏற்றிச் சென்றது.
சிறிலங்கா இராணுவத்தின் எயர் மொபைல் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் டபிள்யூ ஏ.ஜே ஹேமச்சந்திர தலைமையில் சிறிலங்கா படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
கடந்த 10ஆம் திகதி தொடங்கிய கூட்டுப் பயிற்சி 23ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும்.

