மேலும்

ஒரேகுற்றம் இரண்டு வழக்குகள்- சிக்கிய முன்னாள் இராணுவ அதிகாரி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்ட குற்றச்சாட்டில்,  சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2015 அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, 2014ஆம் ஆண்டில் கரம் மற்றும் சதுரங்கப் பலகைகள் வாங்கியதன் மூலம், அரசாங்க நிதியை வீணடித்ததாக, முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னான்டோ ஆகியோருக்கு எதிராகவும், அப்போது விளையாட்டுத்துறை அமைச்சின் செயலராக இருந்த முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தமல்லவராச்சிக்கு எதிராகவும், நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் சார்பில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை இந்த மோசடி தொடர்பாக தனியாக விசாரணைகளை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில், இரண்டு பேருக்கும், முறையே 20 மற்றும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

எனினும், விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராக இருந்த மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளாால் குற்றம்சாட்டப்படவில்லை.

இந்த நிலையில் சட்டமா அதிபர் தரப்பில் இதே மோசடி தொடர்பாக நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராக இருந்த மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி மோசடிக்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டமா அதிபரின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தியும், தமக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்திற்கு இடைக்கால தடை  உத்தரவு பிறப்பிக்க கோரியும், மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் இரண்டு சுயாதீன அமைப்புகளாக இருந்தாலும், இரண்டும் அரசாங்கத்தைப் ஆயுதங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனஎன்றும், அவற்றின் நடவடிக்கைகள் சட்ட நிலைத்தன்மை மற்றும் நியாயத்தை மதிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ரோஹந்த அபேசூரிய தலைமையிலான இரண்டு நீதியரசர்களை உள்ளடக்கிய,  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு ஜூலை 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *