சிறிலங்கா- பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சியை தடுத்த இந்தியா
திருகோணமலையில் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையே நடத்தப்படவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை கடற்பரப்பில், சில வாரங்களிற்கு முன்னதாக இந்த கூட்டு இராணுவப் பயிற்சிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டுப் பயிற்சி தொடர்பாக, புதுடெல்லி தனது கவலைகளைத் தெரிவித்த பின்னர், சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சியை கைவிட முடிவு செய்துள்ளதாக பல்வேறு தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா – பாகிஸ்தான் கடற்படைகளின் வழக்கமான ஈடுபாடுகளுக்கு ஏற்ப திருகோணமலையில் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நலன்களுக்கான, ஒரு குறிப்பிடத்தக்க கேந்திர மையமாக திருகோணமலை கருதப்படுகிறது.
இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத்திற்கு சில வாரங்கள் முன்னதாக இந்தக் கூட்டுப் பயிற்சி நடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 5ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் அஸ்லட் என்ற போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த போதே திருகோணமலையில் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளும் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.