நிஸ்ஸங்க சேனாதிபதியை சந்திக்கவில்லை – மறுக்கிறார் அமைச்சர்
மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியை தனது அமைச்சில் சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மறுத்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சரும், மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் பொது பாதுகாப்பு அமைச்சில் சந்தித்ததாக, சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக, அமைச்சரின் ஊடக செயலாளர், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரோ அல்லது அவரது பிரதிநிதியோ மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியை ஒருபோதும் சந்திக்கவில்லை என்றும், இவ்வாறான போலி செய்திகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஜபக்சவினரின் நெருங்கிய கூட்டாளியான மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது பல்வேறு ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.