முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைக்க நாடாளுமன்றில் பிரேரணை
சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரி இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
‘இனங்கள் அல்லது மதங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் பெயரிடலைத் தடை செய்தல்’ என்ற தலைப்பில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
“இனங்கள் அல்லது மதங்களின் அடிப்படையில், அரசியல் கட்சிகளின் பெயரிடலைத் தடை செய்ய வேண்டும் என்றும், தற்போது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இனங்கள் அல்லது மதங்களைக் குறிக்கும் பெயர்களைக் கொண்ட, தற்போது செயற்படும் அரசியல் கட்சிகளின் பெயர்களில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் இந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால், தமிழ் அரசியல் கட்சிகள் பல தமது தற்போதைய பெயர்களில் இயங்க முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.