பிரித்தானிய தடைகள் – இன்னமும் ஆராயாத அமைச்சரவை குழு
சிறிலங்காவின் மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் கருணா மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு, இன்னமும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை.
பிரித்தானியாவின் முடிவு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளுடன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக சிறிலங்காவின் அமைச்சரவைக் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர,
ஆரம்பகட்ட விவாதங்கள் நடத்தப்பட்ட போது, விரிவான விவாதங்கள் இன்னமும் இடம்பெறவில்லை என்றும், விரைவில் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.