இந்தியாவுடன் தரைவழி இணைப்பு குறித்து பேச மறுத்த சிறிலங்கா ஜனாதிபதி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்களின் போது, இந்தியாவுடன் தரைவழி இணைப்புத் திட்டத்தைப் பரிசீலிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2002- 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது இரு நாடுகளையும் இணைக்கும் தரைப்பாலம் குறித்து முதலில் கலந்துரையாடப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, புதுடெல்லிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும், தரை இணைப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த டிசம்பரில் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்த நேரத்தில் இந்தத் திட்டத்தைத் தொடருவது பற்றி பேச முடியாது என மறுத்து விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அண்மையில், இந்தியப் பிரதமர் மோடியின், வருகையின் போது இந்த விடயம் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கவில்லை.
இருப்பினும், இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஒரு சந்தர்ப்பத்தில், பிரதமர் மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி இணைப்பு பற்றி குறிப்பிட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவர் சிறிலங்காவில் இருந்து இந்திய விமானப்படை உலங்குவானூர்தியில், பண்டைய காலத்தில், சிறிலங்காவையும் இந்தியாவையும் இணைத்த ராமர் சேதுவை அவதானித்த படியே, இராமேஸ்வரத்திற்குப் பயணித்திருந்தார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.