விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ வேலி
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில், சிறிலங்கா படையினரின் நீண்டகால ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள், விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும், அந்தக் காணிகளை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பில் வைத்துள்ளதால் உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு காணி உரிமம் வழங்கும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ், ஒட்டகப்புலம் பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் 408 பேருக்கு 235 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன.
பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு ஜே/244, வயாவிளான் மேற்கு ஜே/245 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த காணிகளே, சிறிலங்கா படையினரிடம் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் காணிகள் விடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், சிறிலங்கா படையினரின் இராணுவ வேலி இன்னமும் அகற்றப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் பிரதான வீதிக்குப் போக்குவரத்துச் செய்வதற்கு நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதுடன், பொழுது சாய முன்னரே பொதுமக்கள் தமது நிலப்பகுதிகளை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
அத்துடன், விவசாய நிலங்களில் தமது பாதுகாப்புக்காக தற்காலிகக் கொட்டகைகளை அமைக்கவும் சிறிலங்கா படையினர் தடைவிதித்துள்ளனர்.
இதனால் பெயருக்கு விடுவிக்கப்பட்ட காணிகளின் மூலம் முழுப் பயனையும் பெற முடியாத நிலையில் இருப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.