சிறிலங்காவில் ஒரு இலட்சம் வேலைகள் பறிபோகும் ஆபத்து
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக, சிறிலங்காவில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
இந்த நிலைமையை ஒரு பொருளாதார அவசரநிலை என்று விபரித்துள்ள அவர், வரவிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“வரிகள் அதிகரிக்கும் போது, பொருட்களுக்கான நுகர்வோரின் கேள்வி குறைகிறது. இது ஒரு கற்பனையான சூழ்நிலை அல்ல.
இதன் ஒரு நேரடி விளைவு வேலை இழப்புகள் ஆகும். 100,000 க்கும் மேற்பட்ட வேலைகள் ஆபத்தில் இருப்பதாக சிலர் மதிப்பிடுகின்றனர்.
இந்த எண்ணிக்கை மேலும் உயரும் ஆபத்து உள்ளது” என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“இதன் தாக்கம், வேலை செய்பவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது, பொருளாதாரம் முழுவதும் பரந்துபட்டளவில் தாக்கம் செலுத்தும்.
விடுதி வீடுகள், கடைகள் மற்றும் பிற ஆதரவு சேவைகளை நடத்தும் மக்களின் வருமானத்தையும் பாதிக்கும். இது எமது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
ஏற்றுமதி வருவாயில் ஏற்படும் வீழ்ச்சி சமநிலையை மோசமாக்கும், ரூபாயின் மதிப்பை பலவீனப்படுத்தும். பொருளாதார வளர்ச்சியில் மேலும் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.