மேலும்

மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்

இலங்கைத் தீவில் தமிழர்கள் மத்தியில்  இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறீஸ்தவமதமும் உள்ளன. இருந்த போதிலும் அரசியல் நோக்கம் கொண்ட மதவாத சர்ச்சைகள் தமிழர்கள் மத்தியிலே என்றும் தன்னிச்சையாக எழுந்ததே கிடையாது.

1948 காலகட்டத்திலிருந்து தமிழ் மக்கள் மத்தியிலே மத பிரிவினை இருந்ததில்லை என்பதை பல்வேறு சமூக ஆய்வாளர்களும் கூறி வந்துள்ளனர்

அரசியல் தேவைகளுக்காக இலங்கைத்தீவு இரு கூறாக பிளவுபட்டு போவதை தடுக்கும் நோக்கத்திற்காக,  தமிழ் மக்களிடையே மதப்பிரிவினையை உருவாக்கும் பொறி முறை, மிகவும் இரகசியமான- முக்கியமான பாரிய திட்டமாக கையாளப்பட்டது . கையாளப்பட்டு வருகிறது.

ஆயுதப்போராட்ட காலத்திலும் மத நல்லினக்கத்தை பேணுவதில் போராட்ட தலைமை மிக முக்கிய கவனம் செலுத்தியதை காண கூடியதாக இருந்தது. சிங்கள பௌத்த அரசின் சதித்திட்டங்களின் பலனாக, ஆயுத போராட்ட காலத்தில் பல்வேறு சிக்கல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது என்பது இஸ்லாமிய ஆய்வாளர்கள் சிலர் ஏற்றுக்  கொண்டுள்ளனர்.

இந்த நிலை தமிழ் மக்களின் தேசிய விடுதலையை இடையூறு செய்து மேலைத்தேய பார்வையாளர்களையும் பல நாடுகளையும் திசைமாற்றம் செய்யும் வகையில்   சிறிலங்கா அரச தரப்பு தேசிய இனப்பிரச்சனையை சிக்கல் நிறைந்த மூன்ற பிரிவான சர்ச்சையாக காட்டுவதில் மிக முக்கிய கவனம் செலுத்தியது என்பதிலிருந்து வெளியாகிறது.

சிங்களம், தமிழ் என இரு மொழிகளுக்கிடையிலான சிக்கலாக பார்க்காது, தமிழ் பேசும் மக்களை இரு கூறுகளாக இந்து தமிழர்கள்,  இஸ்லாமியர்கள் என பிரிப்பதன்  மூலம் – மூன்று மதங்களுக்கு இடையிலான பிரச்சினையாக காட்டுவதன் மூலம்  இந்த சிக்கலாக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில், மேலைத்தேய அரசியல் கோட்பாட்டாளர்களின் பார்வையில் பல்லின சமுதாய அரசில் இரண்டு தேசியங்களுக்கு இடையிலான பிரச்சனையை தீர்த்து வைப்பதிலும் பார்க்க மூன்று அலகுகளுக்கு இடையில்  எழுந்துள்ள பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு மிகவும் கடினமான , சிக்கலான நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை ஏற்படும். இதற்கு  ஏற்ற வகையில் சிக்கலான அரசியலை உருவாக்கி விடும் நோக்குடன் சிறிலங்கா அரசு செயற்பட்டு வந்துள்ளது.

அடுத்து மேலைநாட்டு அரசியல் சித்தாந்தத்தில்  ஒரு நாடு ஜனநாயக முறையில் ஆளப்படுகிறது என்று தெரிந்தாலே அந்த நாட்டில் அது பிரிக்கப்பட்டாலும் இனைந்திருந்தாலும் அனைத்து சமூகங்களும் சமஉரிமையும் சுதந்திரமும்  உடையனவாகவே இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை யாகி விடுகிறது .

இஸ்லாமிய மக்களை மத ரீதியாக பிரிக்கும் செயற்பாடு மூர் என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொற்பத்தின் ஊடாக, மூர்களுக்கும் அடையாளம் உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையிலாக வாய் பேச்சுகளும் பத்திரிகை கட்டுரைகளும் வெளி வந்தன. தமிழ் பிரிவினையை உண்டு பண்ண கூடிய சிறிலங்கா அரச மற்றும் பெரும்பான்மை சார்பு அலகுகளால் இஸ்லாத்தை தழுவும் தமிழர்கள்  பெருமைக் குள்ளாக்கப்பட்டனர்.

மேலும் அரச ஊட்டத்தின் பெயரில் உழைக்கும்  ஒரு சில தமிழ் மொழியை அல்லது தமிழ் பெயர்களை தமதாக கொண்டவர்களாலும் தமிழரை பிரிக்கும் வகையிலான  கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு ஏற்றவாறு வரலாறும் உருவாக்கம் பெற்றது.

இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில்,  இலங்கைத்தீவில் எந்த ஒரு சிறு ஊரை எடுத்து கொண்டாலும் சங்க காலத்திலிருந்தும் பகவத்கீதை காலத்திலிருந்தும்  பௌத்த மத வருகையின் போதிருந்தும் அராபியர்களின் வருகையின் போதிருந்தும், சீனர் வருகையிலிருந்தும், போர்த்து கீசியர்கள் வருகையின் போதிருந்தும்  ஒல்லாந்தர், ஆங்கிலேயர்  என ஒவ்வொரு காலப்பகுதியிலிருந்தம் ஒரு வரலாறை உருவாக்கலாம்.

அந்த ஊரில் வாழும் எல்லோருக்கும் அவர் என்ன மதமாயினும் என்ன இனமாயினும் புனைகதைகளின் ஆதாரம் கொண்டு,  தனது வரலாற்றை ஒரு ஆதிகால வரலாறாக கூற எவ்வாறோ வரலாற்று ஆதாரம் கிடைத்து விடும் என்பது தான் உண்மை. இந்த நிலையில் தான் இலங்கைத்தீவு இன்று உள்ளது.

இன்றைய நடைமுறை அரசியலில் இஸ்லாமியர்களை அவர்களது எந்த கோலத்திலும், அதாவது அவர்கள் ஆதிவாசிகளாக இருந்தாலும்  மூர்களாக இருந்தாலும் அராபியர்களாக இருந்தாலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் விவகாரத்தில் அவர்களுக்கான உரிமையும் கடமையும் கொண்ட சாதாரண தமிழ் மக்களாக வாழ்வதிலோ பொது வாழ்வில் ஈடுபடுவதிலோ எந்த வகையிலும்  விலக்கப்பட்டிருக்க முடியாது

இன்றைய வடக்கு கிழக்கு அரசியல் நிலைமையின் பிரகாரம் ஈழத் தமிழ் மக்களிடையே உள்ள அரசியல் ஆய்வாளர்கள் பலர் இஸ்லாமியரை இன்னமும் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்து  நோக்கும் நிலையை பார்க்கும் பொமுது அவர்களுடைய பார்வை எந்த அளவு எதிர்கால ஆரோக்கிய வாழ்வை கொண்டது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழ் மக்கள் தமது உள்ளக கட்டமைப்பில் ஜனநாயக போக்கையும் சர்வதேச பார்வைக்கு ஒரு தமிழ் தேசிய அரசியல் செய்வதுவும் இன்றைய காலத்தில் மிகவும்   முக்கியமானதாக  உள்ளது.  ஆனால்  வெளியுலகிற்கு ஈழத்தமிழர்களாக தம்மை காட்டி கொண்டு  தமிழ் மக்கள் மத்தியில் மதஅரசியலை தூண்டும் வகையில் இஸ்லாமிய மத பிரிவை அரசியல் ஆதாரமாக கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டிலே திராவிடம் பேசி சாதி அரசியலை வாக்கு வங்கிகளாக வைத்திருக்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையில் குறிப்பிட்ட ஒரு ஒற்றுமை இருப்பது சரியானதாகவே தெரிகிறது. (ஆதாரம் கடந்த கட்டுரை தமிழகம்)

இதற்கு ஒரு நல்ல உதாரணம் இவ்வருடம் ஜூன் மாதம். இடம் பெற்ற, காலம் சென்ற திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழாவில் ஒரு ஈழத்தமிழனாக கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ,  அங்கே கருணாநிதியின் வரலாற்றை எடுத்து கூறி மிகப்பெரும் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து அதே பயணத்தில் ஒரு பகுதியாக தமிழ் நாட்டு யூரியூப் ஒளிபரப்பு ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், பெரியாரிய பகுத்தறிவு கோட்பாடு சமயம் சார்ந்த விடயம் அல்ல பகுத்தறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளில் முஸ்லீம்கள் பாதிக்கப்படவில்லை. முஸ்லீம்கள் மத்தியிலே சமய உணர்வை விட தமிழன் என்ற உணர்வு  மேலோங்கியது என்று கூறினார்.

மேலும் அந்த பேட்டியிலே அவர் கூறிய  வடக்கு கிழக்கு மாகாணங்கள் பலவந்தமாக பிரிக்கப்பட்டதா அல்லது பலவந்தமாக இணைக்க முனைகிறார்களா என்பதில் மிகவும் தெளிவற்ற ஒரு நிலை உள்ளது . இஸ்லாமியர்கள்  தமிழர்கள் இல்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது சரியானதாக தெரியவில்லை .  ஏனெனில் தமிழ் என்பது ஒரு மதம் அல்ல, தமிழர்களை இந்துகளாக பார்ப்பது ஹக்கீம் அவர்களின் தனிப்பட்ட அரசியல் இலாப நோக்கம் கொண்ட தாகவே தெரிகிறது.

ஏனெனில் தமிழ்நாட்டில் ஈழத்தமிழனாகவும்,   ஈழத்தில்  முஸ்லீமாகவும் பார்ப்பதானது, தமிழ் மக்களை இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் பிரித்து வைப்பதன் மூலமே ஹக்கீம் அரசியலில் தனது நிலையை தக்க வைத்து கொள்ளலாம் . இதுவே அவரது நோக்கமாக தெரிகிறது.

முன்னுக்குப்பின் முரணான விவாதங்களை வைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மீதான தனது ஆளும் உரிமையை  தேட முனைகிறார் என்பது வெளிச்சமாக தெரிகிறது.

சிறிலங்காவை பொறுத்தவரையில் இதர மத நம்பிக்கைகளை சிங்கள பௌத்தம் என்றும் நசுக்கி விடவே முயற்சித்துள்ளது. உதாரணமாக இஸ்லாமிய உணவுமுறை ஆடை முறை அதிகாலையிலும் இரவிலும் இடம் பெறும் பிரார்த்தனைகள் குறித்த விவகாரம் என சமூக வாழ்விற்கு எதிரான அழுத்தங்களை மறைமுகமாக மதவாத சக்கதிகளின் விருப்பத்திற்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறது.

ஆனால் தமிழ் அப்படியான சமூக வாழ்வில் தலையிடுவது இல்லை . அது ஒரு மொழியாகவே உள்ளது. இஸ்லாமிய இலக்கியங்களை கூட போற்றி அதன் அடையாளங்களை தனித்துவமாக எடுத்து காட்டி உள்ளது.

மேலும் சிங்கள தரப்பு இன்று இஸ்லாத்தின் மீது ஒரு பெரும் பயங்கரவாத முலாம் பூசுவதில் மிக கவனமாக செயற்பட்டு வருகிறது. மத ரீதியான விவகாரங்களை திரிபு படுத்தி கூறுவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.  இதற்கு தமது வியாபார நோக்கங்களுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் இஸ்லாமிய அரசியல் தலைவர்களே உடந்தையாக உள்ளனர் .

இந்த நிலையானது எந்தப் பொழுதிலும் இலங்கைத்தீவில் வாழும்  இஸ்லாமிய மக்கள் மீது  பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க கூடிய வகையில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஆட்சி உரிமை பெற்ற ஒரு தரப்பாகவே சிறிலங்கா தரப்பை உயர்த்தி உள்ளது.

மதம் பிடித்த அதீத இஸ்லாமிய அரசியல் தலைவர்கள்   ஏப்ரல் மாதத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு களின் பின்பு  கைது செய்யப்பட்டும்  பின்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் அரசின் நன்மதிப்பை பெறும் பொருட்டு இன்னமும் தமது சமூகத்தின் மத்தியிலேயே பிளவை உண்டு பண்ணுவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.`

இது மத அடிப்படையிலான முத்தரப்பு பிச்சினையாக்குவதில்  அரசிற்கு பெரும் உதவியாக இருக்கின்றது.  மட்டுமன்றி மேலும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நிலைக்கே இட்டு செல்லும்

ஈழத்து இந்துவாதம்

ஈழத்து இந்து மதவாதிகளும் அண்மைக் காலங்களில் மத அடிப்படையிலான வாதங்களை   சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளின்  மத்தியில் உள்ள இந்து கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அனுதாப   உருவாக்கல் பிரசாரங்களில் ஈடுபட்டிருப்பதை காண கூடியதாக உள்ளது.

இந்தியாவின் மதவாத  அடிப்படையிலான    அரசாங்கத்தின் அனுதாபத்தை பெறும் பொருட்டு, பௌத்தத்திற்கு எதிரான பிரசாரம் வெற்றி யை தரக்கூடியதாக இருந்தாலும் அவர்களுடைய நிலைப்பாட்டை இந்திய மட்டத்திலேயே வைத்து கொள்ளும் வகை யில் கையாள வேண்டிய நிலையே உள்ளது.

ஏனெனில் எந்த மதவாத சிந்தனையாளர்களும், இந்திய உள்நாட்டு அரசியலில் இருக்கக் கூடிய மதவாத கருத்துகளுக்கும், மத சார்பற்ற கருத்து வேறுபாடுகளுக்கும் இடையிலான பிரிவுகளால் உந்தப்பட்ட நிலையை தமிழ்ப் பகுதிகளுக்கு பரவ செய்வது அரசியல் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது.

பௌத்த மத சார்பு தமிழர்கள்

அதேபோல மதவாதத்தை மனதார ஏற்று கொண்ட கல்விமான்கள் சிலர் இலங்கைத்தீவு சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்ற விம்பத்தை உருவாக்குவதை    தமது தொழில் நலன், பதவி நலன், அரசியல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு   பணியாக கொண்டுள்ளனர்.

மேலைத்தேய கல்வி கற்ற இவர்களை அரசு தனது கைக்குள் வைத்திருக்கிறது.  மேலைத்தேய ஆய்வு முறைகளின் படி, வாத, பிரதி வாதங்களை முன் வைத்து ஆய்வு கட்டுரைகளை எழுதி வரும் இவர்கள், தம்மை நடுவு நிலை  ஆய்வாளர்கள் என்ற  பெயரில் உலகிற்கு உண்மையை உளறி விடுவார்கள் என்பதினாலே இவர்களை, கட்டிவைத்து சோறு போடுவதற்கு நாய்குட்டிகளாக தம்முடன் இருப்பார்கள் என்ற நோக்கிலேயே ஆகும்.

இவர்கள் கொழும்பின் புகழ் பாடல் இராஜதந்திரத்திற்கு மயங்கியவர்களாக காணப்படுவது தமிழினத்திற்கு பெரும் கேடு ஆகவே தெரிகிறது.  நேரிலே நண்பர்களாகவும் பண்பாகவும் இத்தகைய அரசியல்வாதிகளுடன் பழகும் கொழும்பு அரசியல்வாதிகள் பத்திரிகைகளில் அவர்களை பிரிவினைவாதிகளாக சித்தரிப்பதன் மூலம் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகளாக தமது காலடியில் வைத்திருக்கும் தன்மையை பல இடங்களில் காணலாம்

இவ்வாறு தமிழால் இணைந்திருக்க கூடிய  இந்து மதமும் இஸ்லாமிய மதமும் தமிழ் உணர்வு இல்லாத நிலையில் பல கோணங்களில் பிரிந்து சிங்கள பௌத்தத்தின் கட்டு பாட்டிற்குள் இருக்கின்றன. இதனால் அரச நிறுவன அதிகாரங்களையும் இதனூடாக  சர்வதேச அங்கீகாரத்தை இலகுவாக பெற்று கொள்ள கூடிய சந்தர்பங்களை கொண்ட சிங்கள பௌத்தத்திடம் தமது விதியை கையளித்து விட்டிருக்கின்றன.

-லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *