தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள்
தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
நேற்று மாலை 6.05 மணிக்கு மணி ஒலியுடன் ஆரம்பித்த மாவீரர் நாள் இறுதி நிகழ்வுகள், அகவணக்கம், மாவீரர் நினைவுச் சுடரேற்றல், மலர் வணக்கம் ஆகியவற்றுடன் நிறைவடைந்தது.
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள துயிலுமில்லங்களுக்கு அருகில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடங்களிலும், ஏனைய மாவீரர் நினைவிடங்களிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பல இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர், பொலிசார் தடைகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்திய போதும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்றன.
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் 3000இற்கும் அதிகமான சுடர்கள் ஏற்றப்பட்டன.
யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைய மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் அதனை மீறி நேற்று காலையும் மாலையும் பெருமளவு மாணவர்கள் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.