மேலும்

யாருக்கு வாக்கு?- தமிழ் மக்களையே முடிவெடுக்கக் கோருகிறார் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தமிழ் மக்கள் கடந்த கால வரலாறு மற்றும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி- பதில் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளருடைய  தேர்தல் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் –

தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக்கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் எமது 13 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து 5 கட்சிகளுடன் கூட்டாகப் பேசுவதற்குத் தயாராக இருக்கவில்லை என்பதுடன் தேர்தல் அறிக்கைகளை மாத்திரமே வெளியிட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார விடயங்கள் குறித்தே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அவற்றிற்குத் தீர்வு காணும் போது மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற தொனி அவரின் அறிக்கையில் வெளிப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகிறது.  இனப் பிரச்சினை பற்றி எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க அவர் முனையவில்லை.

இதேவேளை சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையில்பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு முன்னர் அதே பகுதியில் பக்கம் 16 இல் “நாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவோம் என்று“ சிங்களப் பிரதியில் பக்கம் 16 இல் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஐக்கியம் (Unity) என்ற சொல் பாவிக்கப்பட சிங்களத்தில் ‘ஏகீயத்வய’ என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. ‘ஏகீயத்வய’ என்ற சொல் ஒற்றைத் தன்மையை வெளிக்காட்டுகின்றது. அதாவது அச்சொல் ஒற்றையாட்சிக்கு வழியமைக்கும் ஒரு சொல்.

உண்மையில் Unity ஐக்கியம் என்ற சொற்களுக்குப் பாவிக்கப்பட வேண்டிய சிங்களச் சொல் ‘எக்சத்வய’ என்பது. அதனால்த்தான் ஐக்கிய தேசியக்கட்சி எக்சத் ஜாதிக பக்சய என்று அழைக்கப்படுகிறது. ஏகிய ஜாதிக பக்சய என்று அழைக்கப்படுவதில்லை.

பலரை ஐக்கியப்படுத்துவதாகக் குறிப்பிட்டே ஐக்கிய தேசியக்கட்சி என்று தமிழில் குறிப்பிடப்படுகின்றது. ஒற்றைத் தேசியக் கட்சி என்று கூறுவதில்லை.

ஆனால் ஆங்கில தமிழ் பிரதிகளில் Unity ஐக்கியம் என்ற ஒருபொருட் சொற்களைப் பாவித்து விட்டு சிங்களத்தில் ‘எக்சத்வய’ என்ற அதே கருத்து கொண்ட சொல்லைப் பாவிக்காமல் ‘ஏகீயத்வய’ என்ற சொல் ஏன் பாவிக்கப்பட்டுள்ளது? ‘ஏகீயத்வய’ என்ற சொல் சிங்கள மொழியில் தகுந்த காரணத்துடன் தான் பாவிக்கப்பட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

அதேவேளை ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறி த்து சில நல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளான சுயநிர்ணய உரிமை, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி, எமது தேசிய இறைமை ஆகியவை குறித்து அவரது தேர்தல் அறிக்கையில்எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக அவற்றிற்கு இடம்கொடுக்காத வகையில் ‘ஏகீயத்வய’ என்ற சொல்லைப் பாவித்துள்ளார். அப்படியானால் நாம் அரசியல் ரீதியாகக் கேட்கப்போகும் எதற்கும் இடமளிக்கமாட்டேன் என்பது தான் அவரின் கருத்து.

அதேசமயம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை போன்ற கடும்போக்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது பௌத்த அடிப்படை வாதத்திலாலான ஒரு ஆட்சியை உருவாக்கி விடுமோ என்கின்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது.

இன்னும் பல குறைபாடுகள் அவரது தேர்தல் அறிக்கையில்காணப்படுகின் றன. அவற்றுள் ஒன்றுதான் 1992 ஆம் ஆண்டின் 58ஆவது இலக்க சட்டத்தை நீக்க முன்வராமை.

1987 தொடக்கம் அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் மாகாண ஆட்சிக்குக் கீழ் வந்தனர். இவர்களை மத்தியின் அதிகாரத்தினுள் கொண்டு வந்தது மேற்படி சட்டம். இப்போது மத்திக்கு ஆதரவாக அவர்களை வைத்துக்கொண்டு மாகாண முகவர்களாகவும் நியமிக்க எத்தனிக்கின்றார்கள். மாகாண அரச சேவைக்குள் அந்த அலுவலர்களைக் கொண்டு வரப்போவதாகக் கூறவில்லை. ஆகவே இந்தத் தேர்தல் அறிக்கை தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் திருப்திகரமான ஒன்றாக அமையவில்லை.

2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்த லின் போது வெளிப்படையாக எந்த ஒரு உறுதிமொழியையும் பெற்றுக்கொள்ளாமல் தமிழ் மக்கள் வாக்களித்து கடைசியில் ஏமாற்றத்தையே பெற்றுக் கொண்டனர். இன்றும் எமது அடிப்படைக் கோரிக்கைகளை ஏற்காத நிலையே தொடர்கின்றது. இதைத்தான் நான் தொடர்ந்து கூறிவருகின்றேன்.

இவ்வாறான நிலை நீடித்தால் காலக்கிரமத்தில் தமிழ் மக்கள் தங்கள் மாகாணங்களில் சிறுபான்மையினராக ஆகிவிடுவர். அதற்கு ஏற்றவாறு எம் மக்களுள் பலர் வெளிநாட்டுக்கு செல்வதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.

எனவே மீண்டும் ஒரு முறை வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் அறிக்கை ஒன்றை அதுவும் கரவாகச் சிங்கள பிரதிகளிலும் ஆங்கில, தமிழ்ப் பிரதிகளிலும் வித்தியாசங்களை உட்புகுத்தியிருக்கும் ஒன்றை நம்பி எவ்வாறு எமது மக்கள் ஆதரவு அளிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

ஆகவே நாம் தீர்மானித்த எமது கட்சி யின் முன்னைய நிலைப்பாட்டையே மீண் டும் வலியுறுத்துகின்றோம். அதாவது எந்த முக்கிய கட்சி, கூட்டின் சிங்கள வேட் பாளருக்கும் வாக்களிக்கும்படி எமது விரலால் சுட்டிக் காட்டுவதற்கான தார்மீக உரிமை எமக்கு இல்லை என்பதே எனதும் எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, ஜனநாயக ரீதியாகத் தேர் தலில் வாக்களிக்கும் எமது மக்களின் ஜனநாயக உரிமையை நாம் மதிக்கின்றோம். அவ்வுரித்தை எம்மக்கள் பயன்படு த்த வேண்டும். எமது கடந்த கால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக, புற சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம். யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தேர்வாகும்.” என்றும் அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *