மேலும்

சந்திரிகாவின் மாநாடு இன்று – பதற்றத்தில் சுதந்திரக் கட்சி தலைமை

‘அபி சிறிலங்கா’ என்ற பெயரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, கட்சி அமைப்பாளர்களுக்கு குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் பெருமளவிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ள நிலையில், அந்த முடிவினால் அதிருப்தியடைந்துள்ள, கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளனர்.

இதில்,சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மாநாடு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்சி உறுப்பினர்கள், பிரதிநிதிகளை இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தடுக்கும் வகையில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்றும், இதில் பங்கேற்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒருமனதாகவே கட்சி முடிவெடுத்தது என்றும், அதுபற்றி கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பது கட்சியின் ஒழுக்கத்தை மீறுகின்ற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அபி சிறிலங்கா என்ற பெயரில் சந்திரிகா ஆரம்பித்துள்ள அமைப்பு ஏற்கனவே, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும், ஜனநாயக தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *