மேலும்

திங்களன்று சென்னை – யாழ். விமான சேவை – பயண நேரம், கட்டணங்கள் அறிவிப்பு

சென்னை- யாழ்ப்பாணம் இடையே, வாரத்தில் மூன்று நாட்களுக்கு, அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை வரும் 11ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அலையன்ஸ் எயர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக திங்கள், புதன், சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நடத்தவுள்ளது.

பின்னர், கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.35 மணிக்குப் புறப்படும், 9I 101 இலக்க விமானம், மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும்.

பிற்பகல் 12.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 9I 102 இலக்க விமானம், பிற்பகல் 2.10 மணியளவில் சென்னையை வந்தடையும் என்றும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலைய திறப்பு விழா இடம்பெற்ற கடந்த மாதம் 17ஆம் நாள்,  அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம் முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

அதையடுத்து, நொவம்பர் 1ஆம் நாள் தொடக்கம் வழக்கமான சேவை ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சில நடைமுறைகளைச் சிக்கல்களை தீர்க்க வேண்டியிருந்ததால், சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, எயர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயணக் கட்டணம் தொடர்பான அறிவிப்பையும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாவும், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் தனியாகவும் அறவிடப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணமாக 45 அமெரிக்க டொலர் மற்றும் வரிகள், கட்டணங்களும் அறவிடப்படும் என்றும் அலையன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *