மேலும்

வடக்கில் வெற்றியை உறுதிப்படுத்த முன்னாள் தளபதிகளை களமிறக்கினார் கோத்தா

யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத் தளபதிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த காலகட்டத்தில், இறுதிக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்த – போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய- யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த, இரண்டு மேஜர் ஜெனரல்கள், தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் ஜிஏ.சந்திரசிறி மற்றும் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோரே யாழ்.குடாநாட்டில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும், 2005ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 7 ஆண்டுகள் யாழ். படைகளின் தலைமைய கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்களாவர்.

அத்துடன், மேஜர் ஜெனரல் ஜிஏ.சந்திரசிறி, அதற்குப் பின்னர் வடக்கு மாகாண ஆளுநராகவும் 2015 ஆட்சி மாற்றம் வரை பணியாற்றியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த காலத்தில், கொண்டிருந்த தொடர்புகள், மூலங்களைக் கொண்டு கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளையும், அவரது வெற்றியை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் இவர்கள் எடுத்து வருகின்றனர்.

மேஜர் ஜெனரல் ஜிஏ.சந்திரசிறி பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில், கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, கோத்தாபய ராஜபக்சவை நாட்டின் அதிபராக்குவதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *