மேலும்

தடுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – இன்று முடிவை அறிவிக்கும்

இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி, எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என இன்று முடிவை அறிவிக்கவுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் பொறுப்பு அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

நேற்றுக்காலை 11 மணிக்கு அவர் இந்த முடிவை அறிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது, இதற்கான செய்தியாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அந்த செய்தியாளர் சந்திப்பு பின்னர் ரத்துச் செய்யப்பட்டது. இன்று முடிவு தெரியப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர கூறியிருந்தார்.

ஐதேகவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்று காலியில் நடந்த கூட்டத்தில் நேற்று முன்தினம்  சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக நேற்று முன்தினம் இரவு மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

எனினும் கட்சிக்குள் இந்த விவகாரத்தினால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே நேற்று முடிவை அறிவிப்பதில் இழுபறிகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இன்று தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டுள்ளது.

இதில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிப்பதா-  தனியாக போட்டியிடுவதா என்று கருத்துக்கள் அறியப்படவுள்ளன.

இது தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்பட்டதும், அதிபர் சிறிசேன ஊடகங்களுக்கு அறிவிப்பார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மொட்டு சின்னத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவுவதால் தான், முடிவை அறிவிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே நேற்று முடிவு அறிவிக்கப்படவில்லை என்றும் இன்று மீண்டும் தொகுதி அமைப்பாளர்களின் கருத்துக்கள் அறியப்படவுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *