மேலும்

விடுதலையானார் ஞானசார தேரர் – இனி ஆன்மீக வழி தான் என்கிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைய, ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தென்னக்கோன் நேற்றுமாலை தெரிவித்தார்.

6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து வெளியேறிய ஞானசார தேரரை, வாயிலில்  பெருமளவு பௌத்த பிக்குகள் மற்றும், பொதுமக்கள் வரவேற்றனர்.

பின்னர் அவர் கோட்டே சிறி கல்யாணி சமக்ரி தர்ம மகா சங்க சபா சியாம் மகா நிக்காயவின் தலைமை குருவான வண இட்டபன தம்மாலங்கார தேரரைச் சந்தித்தார்.

சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்,

“இப்போது மிகவும் களைப்படைந்துள்ளேன். நாடு தொடர்பாக நான்  கூறியவை அனைத்தும் உண்மையாகி விட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன்.

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *