மேலும்

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – செய்திகளின் சங்கமம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜேவிபி நேற்று  கையளித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நேற்றுக்காலை சமர்ப்பித்தனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க தவறியதாக அரசாங்கத்தின் மீது ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றக்குக்கு கொண்டு வரப்பட்ட சஹ்ரானின் சகா

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் குருணாகலவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற பதிவேட்டு திணைக்கள மூத்த அதிகாரியான மொகமட் நௌசட் ஜலால்தீன் (42) நேற்று நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அவரது பணி அறையில் சோதனைகள் நடத்தப்பட்டதுடன், அவரது கணினியில் உள்ள பதிவுகளும் இரண்டு மணி நேரமாக ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவரை 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியை நீடிக்கமாட்டார் ஜனாதிபதி – மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு  முற்படுவார் என தான் நினைக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு பதவிக்காலத்துக்கு மட்டுமே பணியாற்றுவேன் என்று கூறியிருந்த சிறிலங்கா அதிபர் அவ்வாறு செய்யமாட்டார் என்றும் அதிபர் தேர்தலைப் பிற்போட முனையமாட்டார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரணிலை நீக்கக் கோரும் மனு தள்ளுபடி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சர்மிளா கோணவெல தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சிரான் குணரத்ன, பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் இந்த உத்தரவை வழங்கினர்.

நாலக டி சில்வா பிணையில் விடுதலை

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மற்றும் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை  செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, நாலக சில்வா கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவரை நேற்று பிணையில் செல்வதற்கு கோட்டை நீதிவான் ரங்க ஜெயசூரிய அனுமதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *