மேலும்

றிசாத் பதியுதீனுக்கு எதிரான  பிரேரணை-  என்ன நடக்கிறது?

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படவில்லை என்று கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

நேற்று நடந்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்துள்ள யோசனையை தாங்கள் நிராகரித்துள்ளதாகவும், எனினும் சபாநாயகர் அந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

தெரிவுக்குழு தொடர்பாக முடிவெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற விவாத நாள் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

றிசாத்தை விசாரிக்க தெரிவுக்குழு

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு ஐதேக யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்த தெரிவுக்குழு விசாரணையில் றிசாத் பதியுதீன் மீது குற்றம் இருப்பது கண்டறியப்பட்டால், அவரை பதவியில் இருந்து நீக்க ஆதரவு அளிப்பதெனவும் ஐதேக தீர்மானித்துள்ளது.

பதவி விலகத் தயார் – றிசாத்

தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்படும், விசாரணைகளில் தாம் குற்றமிழைத்தது கண்டறியப்பட்டால், எல்லா பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன்  ஆளும்கட்சி நாடாளுமன்றக் கூட்டத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பதவி விலகல் கடிதத்தை கையளிக்க முயன்றதாகவும், ஆனால் பிரதமர் அதனை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மூவரும் விலக வேண்டும்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,  கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிரான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், நேரத்தை வீணடிக்காமல் றிசாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருமாறும் கோரிய அவர், சிறிலங்கா அதிபர் ஏன் இவர்களைப் பாதுகாக்க முனைகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஐதேக உறுப்பினரும் ஆதரவு

ஐதேக  உறுப்பினர் ஹர்ஷ ராஜகருணவும், றிசாத் பதியுதீனுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *