மேலும்

மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் நாள், மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.

அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள், ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏனைய நான்கு சிறிலங்கா படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு முன்னாள் தலைமை நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *