மேலும்

மதம் பிடித்த பிராந்தியங்கள்

மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின்  அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள்,   மத கொள்கைகளை முன்னிறுத்தி  ஆட்சியை கைப்பற்றி தமது நம்பிக்கைகளையும்  புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தக்கங்களை விளைவித்து வருகின்றனர்.

தமது ஆட்சி அதிகாரப்போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை கொண்டிருக்கின்றனர். கல்வி தலையீடுகள்,  வேலைவாய்பு தலையீடுகள் மட்டுமல்லாது புதிய  சமநிலையற்ற சமூக வாழ்விற்கான காரணிகளாகவும்  சமய அதிகார  ஆட்சி யினர்  உள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் சனநாயக விழுமியங்களுக்கு முரண்பட்ட ஆட்சியாளர்கள் எவ்வாறு தமது அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதில் திட்டமிட்ட வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் தாக்கத்தினால் எவ்வாறு சமுதாய சீர்கேடுகள் உருவாகின்றது  என்பதை இந்த கட்டுரைகள் ஆய்வு செய்கின்றன.

மதமும் அரசியலும்

சிறிலங்காவில் அண்மையில் இடம் பெற்று வரும் நிகழ்வுகள் மதங்களின் பெயரால் இடம் பெற்று கொண்டிருக்கின்றன. இதுபோல் தெற்காசியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கில் பலவருடங்களாக இடம் பெற்று வருகிறது.

மதத்தை மனிதன் உருவாக்கிய மூல நோக்கத்திலிருந்து தவறி, மனித உயிர்களை சீரழிக்கும் ஒரு காரணியாக மதத்தை மனிதன் உபயோகப்படுத்தவது மிகவும் இழிவுத்தனமானதாகும்.

மத போதனை எனும் பெயரில் வன்முறையை தூண்டும் படியான அறிவுரைகளும் அதற்கான வியாக்கியானங்களும் உருவாக்கப்பட்டு இன்னும் ஒரு மத நம்பிக்கையை சார்ந்தவர்களை நோக்கி வன்மத்துடன் திருப்பி விடப்படுகிறது.

இந்த வன்முறை தூண்டல்களின் பின்னால் அரசியல் லாபங்களே எப்பொழுதும் உள்ளன. மக்கள் மத்தியிலே நிலவும் சகிப்பு தன்மை அற்ற நிலையை தந்திரமாக உபயோகப்படுத்தும் சில அரசியலாளர்கள், சர்வதேச அளவில் பரந்து பட்டு உள்ளனர் என்பது உண்மை.

சிறிலங்காவில் இடம் பெற்ற குண்டு தாக்குதல்களுக்கு நாட்டு எல்லைகள் பிராந்திய எல்லைகள் கடந்த அமைப்புகள் உரிமை கோரி நிற்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.

தெற்காசியாவை பொறுத்தவரையில்  இந்தியாவிலும் நேபாளத்திலும் இந்து மத ஆதிக்கமும் பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் மாலைதீவிலும்  இஸ்லாமிய மத ஆதிக்கமும் சிறிலங்காவில் பௌத்த மத ஆதிக்கமும் உள்ளது. இந்த மதங்கள் அந்த நாட்டு அரசியலில் பெரும் தலையீடுகள் செய்கின்றன.

அதேவேளை, மத நம்பிக்கை மூலம்  உருவாக்கிய சமூக ஊடுருவல் காரணமாக குறிப்பிட்ட சில மத பிரதானிகள் தமது அரசியல் செல்வாக்கை பிரயோகிப்பது வெளிப்படையான உண்மையாகும் . மத செல்வாக்குகள் அதிகரித்து இருக்கும் நிலையில்  சர்வதேச அரசியலில் தமது செல்வாக்கை செலுத்தும் பொருட்டு தெற்காசிய பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் சர்வதேச வல்லரசுகள் தமது செயற்பாடுகளுக்கு சாதகமாக்க முனைந்துள்ளன.

மதமும் பிராந்தியமும்

இரண்டாம் உலக போரின் பின் பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த இந்த நாடுகள், சமூக அரசியல் பொருளாதார நிலையில் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறுபட்டவை அல்ல.

அடிப்படையில் தமது விடுதலை சாசனத்தில் தாம் பல்லின ஆட்சி அரசாக இருக்கப் போவதாகவே சுதந்திரம் பெற்று கொண்டன.  மதசார்பின்மையை கடைப்பிடிக்கப் போவதாகவே உறுதி கொண்டிருந்தன.  ஆனால் காலப்போக்கில் பெரும்பான்மை இன மதங்களின் கைகளில் தெற்காசிய நாடுகளின் அரசியல் சிக்குண்டு போய் உள்ளது.

உதாரணமாக இந்து மதத்தின் கையில் இந்தியாவும் நேபாளமும், இஸ்லாமிய மத்தின் கையில் பாகிஸ்தான், வங்காளதேசம் , மாலைதீவு போன்றனவும் பௌத்தத்தின் கையில் சிறிலங்காவும் சிக்குண்டு போய் உள்ளது. இதனால் தற்போது மத அரசியலும் அதன் பின்விளைவுகளும் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றன.

இதனை மேலும் பற்றி எரியக்கூடிய செயற்பாடுகளாக சர்வதேச சூழலில் மதம் சார்ந்த போர் மேகம் ஒன்று மீண்டும் சூழ்ந்து வருகிறது.  இந்த சர்வதேச  போரிற்கான அத்திவாரங்களாகவே கொழும்பு குண்டு வெடிப்புகளும் சர்வதேச அளவில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான உளப்பார்வை உருவாக்கும் போக்கும் உள்ளதோ என்ற எண்ணத்தை  தருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ அவர்கள் ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.

அத்துடன் ஈரானிய புரட்சிகர காவலர் படைகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தார். அது மாத்திரம் அல்லாது B52ரக போர் விமானங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய  மத்திய கிழக்கு அரசியல் எவ்வாறு தெற்காசியாவில் தாக்கம் விளைவிக்கின்றது என்ற  நிலைமையை  புரிந்து கொள்வது அவசியமாகிறது.

மத்திய கிழக்கு மதப்பிராந்தியம்

அரபு நாடுகள் தம்மிடையே கூட்டு உறவு ஒன்றை ஏற்படுத்தி கொள்வதில் பெரும் தோல்வி அடைந்துள்ளன. தமது பொருளாதார அரசியல் சமூக வாழ்வை சமாதானமாக  உறுதி செய்து கொள்ள முடியாத நிலையை இன்று அடைந்திருக்கின்றன. ஒரு நிரந்தரமான மத்திய கிழக்கு கூட்டு ஒன்றை உருவாக்க முடியாது உள்ளன.

மத அரசியல் காரணமாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையை கொண்டிருப்பது, அருகாண்மை பிராந்தியமான தெற்காசிய நாடுகளில் இன்று தாக்கங்களை விளைவிக்க ஆரம்பித்திருக்கிறது.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் ஆரம்பமான ஆட்சி கவிழ்ப்பு போராட்டங்களை தொடர்ந்து நிலைமை மேலும் சிக்கல் நிலையை அடைந்திருக்கிறது. சிரிய அரசியல் நிலவரம் சர்வதேச வல்லரசுகளை தலையீடு செய்யும் நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

அல்லது மறுவளமாக பார்த்தால், அரபு நாடுகளிடையே நிரந்தரமான உறுதியான அரசுகள் அமைவது பொருளாதார மற்றும் எரிபொருள் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடு அற்ற நிலையை கையாளும் வகையில் அரபு நாடுகளை முரண்பட்ட நிலையில் வைத்திருக்க சர்வதேச வல்லரசுகள் திடம் கொண்டுள்ளன.

அதேவேளை, மத்திய கிழக்கு அரபு நாடுகள் மத்தியில் இருக்கக்கூடிய இஸ்ரேல், தனது பாதுகாப்பை மையமாக கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்குவதிலும் சமூக பொருளாதரத்தில் மேம்பட்ட நிலையை அடையாத வகையில் வைத்திருப்பதன் ஊடாக, பலவீனப்படுத்துவதில் பல்வேறு பொறி முறைகளை கையாளுகிறது.

அதற்கு நல்ல உதாரணமாக சிரியாவில் இடம் பெறும் யுத்தத்தை எடுத்து கொள்ளலாம்

சிரிய பிரச்சினையில் பல்வேறு தரப்புகளுக்குமான உதவிகள் சர்வதேச அளவில் பல்வேறு வல்லரசுகளிடம் இருந்தும் பெறப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் நேரடியாக அல்லாது மறைமுகமாக முகவர்கள் ஊடாக யாரிடம் இருந்து யாருக்கு செல்கிறது என்பது வெளியே தெரியாத வகையில் முகவரிகள் தவறாது போராட்ட தரப்புகளுக்கு வந்து சேர்கிறது.

இதனாலேயே சிரிய யுத்தத்தை இது ஒரு முகவர் யுத்தம் Proxey War என்ற சொற்பதங்களுடாக மேலைத்தேய பத்திரிகைகள் அழைக்கின்றன.

சிரிய அரசுக்கு எதிராக போராடும் விடுதலைப் போராளிகளுக்கு துருக்கி ஊடாக சவுதி அரேபியா உதவுகிறது. சுண்ணத்து இஸ்லாமிய மதப்பிரிவை உள்ளடக்கிய இந்த போராளிகளுக்கு வோகாபிஸ் என்று அழைக்க கூடிய சவுதி அரேபியாவின் ஆளும் பழைமைவாத முதலாளித்துவ அரச வர்க்கத்திடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன,

அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் அரச படைகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய வர்களுக்கு ஈரானும் உதவுகின்றன. சியா இஸ்லாமிய வகுப்பை சேர்ந்த ஈரானிய தலைமை மிகப் பெரும் தொகை ஆயுத மற்றும்  உணவு உதவிகளை செய்து வருகிறது.

அதேவேளை ஈராக்கிய யுத்தத்தின் போது தமது தாயக பிராந்தியத்தை அந்த பகுதியில் தக்க வைத்து கொண்டுள்ள குர்திஷ் இன போராளிகள் சிரிய தேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமது ஒருபகுதி தாயகப் பிரதேசத்தை  மீட்கும் பொருட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு  இஸ்ரேலிய உதவி கிடைக்கிறது.

2014 ஆம் ஆண்டு வரை உக்கிரமாக நடந்த போர் நடவடிக்கைகள் அதிபர் டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சி ஏற்புடன் அமெரிக்க செயல்பாடுகளில் தொய்வு கண்டது . இந்த நிலையில் ரஷ்ய கூட்டுடன் சிரியா அரச படைகள்  விடுதலைப் போராளிகளுக்கு எதிராக கடுமையான தாக்கதல்களை நடத்தி திரும்பவும் தமது இழந்த பிரதேசங்களை மீட்டு எடுத்து கொண்டன.

ஐஎஸ் ஐஎஸ் உருவாக்கம்

ஆனால், 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிரியாவுக்கு எதிராக போராட்ட குழுக்களுடன் இணைந்து   போரிட்ட  சுண்ணத்து  இஸ்லாமிய பகுதியான அல் குவைதா அமைப்பிலிருந்த ஒரு சிலரால் இராக்கிய சிரிய இஸ்லாமிய அரசு என்ற ஐஎஸ் ஐஎஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஈராக்கிய யுத்தத்தின் போதே ஐஎஸ் ஐஎஸ் தோற்றம் பெற்று விட்டபோதிலும்,  தமது உக்கிரமான நடவடிக்கைகளை சிரியாவிலேயே ஆரம்பித்தனர். இந்த அமைப்பு சவுதி அரேபிய, அமெரிக்க, இஸ்ரேலிய நேரடி மற்றும் மறைமுக உந்துதல்களின் அடிப்படையிலேயே உருவாகியது.

மத்திய கிழக்கு குறித்த மேலைத்தேய ஆய்வாளர்கள் பலரின் ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் , ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு சவுதி அரேபிய  ஆட்சிப்பீடத்தில் உள்ள வொகாபிஸ் களின் உதவியிலேயே இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சர்வதேச ரீதியாக மிகவும் செல்வாக்கு பெற்றதாகும். அத்துடன் பல்வேறு கிளை அமைப்புகளை தனது வலைஅமைப்பினுள் கொண்டதாகவும் ஐஎஸ் ஐஎஸ் உள்ளது.

கடந்த காலங்களில் மேலைத்தேய அவுஸ்திரேலிய  நாடுகளில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு உரிமை கோரியதன் மூலம்,  உலக மக்கள் மத்தியிலே இஸ்லாத்தின் மீது ஒரு வெறுப்பை உருவாக்குவதே இந்த அமைப்பின் பெரும் வெற்றியாக மேலை நாடுகளில் உணர்ந்து கொள்ளப்படுகிறது.

வெறுப்புருவாக்கம்

சிரிய யுத்தத்தில் சியா இஸ்லாத்தை தழுவும்  ஈரானும்  சுண்ணத்து இஸ்லாத்தை தழுவும் சவுதி அரேபியாவும் மிக கடுமையான முகவர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.  அதேவேளை , மத்திய கிழக்கு நாடுகளில் உறுதியான அரசியல் கட்டமைப்புகள் கொண்ட ஈராக்,லிபியா,எகிப்து ஆகிய நாடுகளை சிதைத்துவிட்ட இஸ்ரேலிய மேலைத்தேய கூட்டு சதியானது தற்போது ஈரானின் உறுதியான அரசியல் கட்டமைப்பை உடைத்து தமது பாதுகாப்பை உறுதி செய்வதில் கருத்தாக இருக்கின்றன.

ஈரான் மீது தமது தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் தேடும் வகையில் இஸ்லாத்தின் மீது வெறுப்புருவாக்கம் நடத்தப்படுகிறது. இதற்கு மறைமுக வொகாபிஸ் ஆட்சியாளர்கள் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.

அதேவேளை   2011 இல் அரபு இலைதுளிர் கால போராட்டங்களால்  இவர்கள் மிகதாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனலாம். சனநாயகத்தின் பெயரால் தமது ஆட்சி அதிகாரத்தை இழக்க சவுதி மன்னர் ஆட்சி என்றும் தயாராக இல்லை.

மேலும் பல அரசியல் கொலைகளில் இருந்து அரச குடும்பத்தினர் மேலைத்தேயத்தால் காப்பாற்றப் பட்டு உள்ளனர்.  இதனால் மேலைத்தேய இஸ்ரேலிய பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்து போக வேண்டிய தேவையும் வொகாபிஸ் அட்சியாளர்களுக்கு உள்ளது.

இந்த நூற்றாண்டின் மிக ஆரம்பத்தில் ஈராக் மீதான படை எடுப்பு நிகழ்த்தும் பொருட்டு அன்றைய அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பல்வேறு நாடுகளையும் சம்மதிக்க வைப்பதில் பெரும் பாடுபட்டார். அதிபர் சதாம் குசைனிடம் மனித இனத்தை அழித்துவிட கூடிய இராசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டது. இறுதியாக பிரான்ஸ் ரஷ்யா சீன நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமலே ஈராக் மீது படைஎடுப்பு நிகழ்த்தப்பட்டது.

ஈராக்கில் இன்று மேற்கத்தேய ஆதரவு அரசு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகம் என்ற பெயரில் அதன் இராணுவ, அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு வலு குறைக்கப்பட்டு  உள்ளது . இருந்த போதிலும் ஈரானின் செல்வாக்கு அங்கு மிக அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ஈரான் மீதான ஒரு நடவடிக்கை நிகழ்த்துவது குறித்து தீவிரமான அடித்தள முயற்சிகள் தற்போழுது ஆரம்பமாகி உள்ளது. கடந்த கால குண்டு வெடிப்புகள் அனைத்தும் இதந்கு அமைவாக உருவாக்கப்படும்   இஸ்லாமிய வெறுப்புருவாக்கத்தின் அடிப்படைகளே எனலாம்.

(தொடரும்)

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *