மேலும்

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

சிறிலங்காவில் மீண்டும் நேற்றிரவு தொடக்கம், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பில் நேற்றுமாலை வெடித்த கலவரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் நேற்று மாலை முச்சக்கரவண்டி சாரதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இரண்டு இனங்களைச் சேர்ந்த குழுக்களுக்கிடையிலான மோதல்களாக உருவெடுத்தது.

சில முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டதுடன், சில உந்துருளிகள் தீயிட்டு எரி்க்கப்பட்டன. பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

அத்துடன், நீர்கொழும்பு காவல்துறை பிரதேசத்தில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கமைய, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பலகத்துறை, கட்டுநாயக்க, திவுலபிட்டிய, கொட்டகதெனிய, பமுணுகம, ரத்தொலுகம, சீதுவை, துங்கல்பிட்டிய, கட்டான ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

ஊரடங்கு நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தமது விமானச்சீட்டை காண்பித்து நீர்கொழும்பு ஊடாக விமான நிலையத்திற்கு பயணிக்க முடியும் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், நேற்றிரவு சமூக ஊடகங்களின் மீது மீ்ண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முகநூல், இன்ராகிராம், வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இதனால் நேற்றிரவில் இருந்து முடங்கியுள்ளன.

தற்காலிகமாகவே இந்த தடை கொண்டு வரப்பட்டதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *