மேலும்

தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் 139 பேர் – 45 பேர் சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில், சிரியாவில் பயிற்சி பெற்ற 45 பேர் உள்ளிட்ட 139 உறுப்பினர்கள் இருப்பதாக, சிறிலங்கா படைகளின் புலனாய்வுப் பிரிவுகளின் அண்மைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

புனித குரானைப் பின்பற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கீழ், 45 பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த அமைப்பில் தற்போது, 139 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இந்த பள்ளிவாசல்களுக்குள் பெண்களும் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்று படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த அமைப்பின் முதல் தலைவர் நிசாம். இவர் பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

இவர் 2012ஆம் ஆண்டு சிரியாவுக்கு சென்றார். அங்கு ஐ.எஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்ற பின்னர், சிறிலங்கா திரும்பினார்.

மீண்டும் அவர், 45 பேரை அழைத்துக் கொண்டு சிரியாவுக்குச் சென்றார். அங்கு அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எனினும், அங்கு நிசாம் கொல்லப்பட்டார்.

பயிற்சிகளை முடித்துக் கொண்ட 45 பேரும், சிறிலங்கா திரும்பி, இந்த அமைப்பை வலுப்படுத்தினர். இதில் தற்போது 139 பேர் உள்ளனர்.

அவர்கள், குண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்த 6 பேரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே என்பது உறுதியாகியுள்ளது.

டிக்வெல்லவில் 10 பேர் கைது

மாத்தறை- டிக்வெல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யொனகபுர என்ற பகுதியில் ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் இருந்தே, இவர்கள் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால், கைது செய்யப்பட்டனர்.

இந்த வீட்டில் இருந்து நான்கு வாள்கள், ஒரு குத்துவாள், கைத்துப்பாக்கிக்கான 107 ரவைகள், அரபு இராணுவ சீருடை, இரவுப் பார்வை தொலைநோக்கி, வெற்று ரவைப் பெட்டி, உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வீட்டில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய உள்ளூர் ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய நபர், ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர், மேற்காசிய நாடு ஒன்றில் பயிற்சி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *