மேலும்

சிறிலங்கா படையினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் – அவுஸ்ரேலியா

சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான HMAS Canberra வில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவுஸ்ரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் இதனைத் தெரிவித்துள்ளார்.

”உள்நாட்டுப் போரின் போது மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்ரேலிய ஆயுதப்படைகளுக்கு எந்த தயக்கமும் இல்லை.

நாங்கள் சிறிலங்கா ஆயுதப்படைகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம். போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்டன. நாங்கள் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது.

மோசமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.

குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கடப்பாட்டை வலியுறுத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியுள்ளது அவுஸ்ரேலியாவுக்கு நம்பிக்கை தருகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, “பிராந்தியத்தில் பொதுவான அச்சுறுத்தலுக்கு எதிராகச் செயற்படும் வழிகளைக் கண்டறிவதில் இரண்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன” என்று இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எயர் கொமடோர் றிச்சர்ட் ஓவென் தெரிவித்தார்.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு தொழிற்துறைப் பிரதிநிதிகள்  தமது உற்பத்திகள் குறித்து விளக்கங்களை அளித்தனர் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *