மேலும்

கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“சிறிலங்காவின் நீதிச் செயல்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் உரையாற்றியமை ஏமாற்றம் அளிக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொள்ள இணங்கி, 3 தீர்மானங்களிலும் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதை சிறிலங்கா அரசியலமைப்பு தடை செய்யவில்லை.

நாட்டின் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, 2015இல் நீதி அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ச, இணங்கியிருந்தார்.

அவரது இணக்கத்தின் அடிப்படையில் தான், 30/1 தீர்மானத்தில் கையெடுத்திடப்பட்டது.

2013ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதியரசருக்கு எதிரான குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த விஜேதாச ராஜபக்ச, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் இணைத்துக் கொள்ள கோரும் தனிநபர் பிரேரரணையை சமர்ப்பித்திருந்தார்.

தமிழ் மக்கள் முற்றிலும் வெளிநாட்டு நீதிப் பொறிமுறையைத் தான் கேட்கிறார்கள்.

சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் அனைத்துலக வாக்குறுதியை தொடர்ந்தும் மீறினால், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை அல்லது ஏனைய வெளிநாட்டு நீதிப் பொறிமுறையை நாடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கருத்து “கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை”

  1. Kandasamysivarajasingam @gmail.com says:

    தற்போதைக்கு சுமந்திரன் பறவாயில்லை மற்றத் திருடர்களைக் காட்டிலும். கெட்டித்தனமும் துணிவும் இருப்பது வரவேற்கக் கூடியது்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *